Show all

சூழ்நிலைக்கேற்ப நிறத்தை மாற்றிக் கொள்ளும் பாஜக எனும் அரசியல் பச்சோந்தி

18,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: பாஜக எப்போதும் பிரிவினைவாதிகள், தேசவிரோதிகள், என்று முஸ்லிம்களையும், கிறிஸ்தவ மிஷனரிகளையும் வசைபாடுவது வழக்கம். ஆனால் ஓட்டு அரசியல் என்று வரும்போது கூச்ச நாச்சமே இல்லாமல் இதே சக்திகளுடன் கை கோர்த்துக் கொண்டு அரசியலில் பச்;;;சோந்தி வாழ்க்கை நடத்துகிறது பாஜக.

மதச்சார்பின்மை என்பது போலியானது; கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பிரிவினைவாதிகளை மென்மையாக அணுகும் தன்மை கொண்டது என்பதுதான் பாஜகவின் விமர்சனம். தமிழகத்திலும் திராவிடம்- ஆரியம் என்பதே கிறிஸ்தவ மிஷனரிகளின் கருத்து என இடைவிடாது விமர்சிக்கிறது பாஜக.

தற்போது மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து மாநில சட்டமன்றங்களுக்குத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் திரிபுரா மாநிலத்தில் பாஜக யாருடனெல்லாம் கூட்டணி வைத்திருக்கிறது பாருங்கள். பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சி ‘ஐபிஎப்டி திரிபுராவில் பழங்குடி இனமக்களை உள்ளடக்கி தனி மாநிலம் கோருகிற வலிமையான அமைப்பு இது. அண்மையில் தனிமாநிலம் கோரி உக்கிரமான போராட்டங்களை நடத்தி இயல்பு வாழ்க்கையை நாசமாக்கியது இந்த அமைப்பு.

கிறிஸ்தவ மிஷனரிகளே கூடாது என விமர்சிக்கும் பாஜக மேகாலயாவிலும் நாகாலாந்திலும் அந்த மிஷனரிகளால்தான் காலூன்றிக் கொண்டிருக்கிறது. மேகாலயாவில் கிறிஸ்தவர்கள்தான் பெரும்பான்மை. இதனால் தேவாலயங்களை மேம்படுத்துவதற்காக சுற்றுலா மேம்பாட்டின் கீழ் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கொடுத்தது நடுவண் பாஜக அரசு. அதுவும் தேர்தல் தேதி அறிவிப்புக்கு ஒரு வாரத்துக்கு முன்னர். கிறிஸ்தவ மிஷனரிகளின் தயவு இல்லாமல் மேகாலயாவில் எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்தே இந்த அறிவிப்பை வெளியிட்டது பாஜக.

நாகாலாந்திலும் கூட சர்ச்சுகளின் வாகனங்களில் பட்டொளி வீசி பறக்கிறது பாஜக கொடிதான். நாகாலாந்து தனிநாடு விவகாரத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் வரை சட்டமன்றத் தேர்தலே கூடாது என்பது நாகா பழங்குடி மக்களின் கோரிக்கை.

இந்த கோரிக்கை தேசவிரோதமானது; தேசத்துக்கே ஆபத்தானது என எந்த முழக்கமும் பாஜகவிடம் இருந்து வரவில்லை. மாறாக நாகா மக்களுடன் இணைந்து கொண்டு தேர்தலை புறக்கணிப்போம் என பாஜகவும் அறிவிக்கிறது.

இதேபோல் கர்நாடகாவில் முஸ்லிம்களின் மஜ்லிஸ் கட்சியுடன் ரகசிய கூட்டணி. முஸ்லிம் வாக்குகள் காங்கிரஸுக்கு போவதைத் தடுக்க இப்படி ஒரு கூட்டணி. உத்தரப்பிரதேசத்தில் இதே பாணியில்தான் மஜ்லிஸ் கட்சியை களமிறக்கியது பாஜக.

இப்போது தமிழகத்தில் நாங்களும் திராவிடர்கள்; எங்க கட்சியும் திராவிட கட்சிதான் என வாய்கூசாமல் பேசுகிறது பாஜக. ஓட்டு அரசியலுக்காக சகலவித பித்தலாட்டங்களையும் கையிலெடுக்கும் பாஜக அதன் ஒவ்வொரு முடிவுகளும் பட்டவர்த்தனமானவே அம்பலப்படுத்தியுள்ளன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,684

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.