Show all

நடுவண் அரசு பொது ‘வரவு-செலவு’ அல்வா தயாரிப்பு நேற்று தொடங்கியது

09,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாடாளுமன்ற வரவு-செலவு கூட்டத் தொடர், 16,தை, தமிழ்தொடர்ஆண்டு-5119ல் (29.01.1018) தொடங்க உள்ள நிலையில், பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இன்று நடைபெற்ற அல்வா தயாரிப்பு நிகழ்ச்சியில், நடுவண் நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி பங்கேற்று அல்வா தயாரிப்புப் பணிகளைத் தொடக்கி வைத்தார்.

தமிழ்தொடர்ஆண்டு-5120ம் (2018-2019) ஆண்டுக்கான நடுவண் வரவு-செலவுத் தயாரிப்புப் பணிகள் தொடங்குவதன், முதல் நிகழ்ச்சியாக அல்வா தயாரிப்புப் பணி நடைபெறுவது வழக்கம். இதற்காக மிகப்பெரிய கடாய்களில் அல்வா தயாரிக்கப்பட்டு, நடுவண் நிதித்துறை அமைச்சக ஊழியர்கள் அனைவருக்கும் வழங்கப்படுவது வழக்கம்.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் நடுவண் வரவு-செலவு பதிகை செய்யப்பட்டு வந்தது. தற்போது, தொடர்வண்டித்துறை வரவு-செலவும் இணைக்கப்பட்டு பிப்ரவரி முதல் தேதியில் பதிகை செய்யப்படுகிறது. வரவு-செலவு பதிகைக்கு 11 நாள் முன்னதாக நடுவண் அரசு செயலகத்தில் உள்ள வடக்கு கட்டிடத்தில் உள்ள நிதி அமைச்சகத்தில் அல்வா கிண்டப்படுவது வழக்கம்.

வரவு-செலவு தயாரிப்பு பணியில் ஈடுபட உள்ள ஊழியர்களுக்கு நடுவண் நிதி அமைச்சராக இருப்பவர் அல்வா வழங்குவார். நடைமுறையில் அல்வா வழங்குதலுக்கு வேறு பொருள் உண்டு. இங்கே அது பொருள் அல்ல.

விடுதலை அடைந்த பின்னர் பதிகை செய்யப்பட்ட முதல் வரவு-செலவு குடியரசுத்தலைவர் மாளிகையில் அச்சடிக்கப்பட்டது. 1950-ம் ஆண்டு வரவு-செலவு தகவல்கள் முன்னதாகவே கசிந்தது. இதனால், மிண்டோ சாலையில் உள்ள அரசு அச்சகத்துக்கு வரவு-செலவு மாற்றப்பட்டது.

தமிழ்தொடர்ஆண்டு-5081ம் (1980) ஆண்டில் வடக்கு கட்டிடத்தில் உள்ள அடித்தளத்தில் நிரந்தரமாக இதற்கென சிறப்பு வசதிகளுடன் அச்சகம் உருவாக்கப்பட்டது. தற்போது வரை அங்குதான் வரவு-செலவு அச்சடிக்கப்படுகிறது. வரவு-செலவு தயாரிக்கும் பணியில் 120 அதிகாரிகள் முறைப்பணியில் வேலை செய்வர்.

முறைப்பணி முடிந்த உடன் வீட்டுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கக்கூடாது. பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் வரவு-செலவை வாசிக்கும் வரை அவர்களுக்கு அந்த அச்சகம்தான் வீடு. செல்பேசி போன்ற எவ்வித தொலைபேசிக்கும் அங்கு அனுமதி இல்லை. மிக மிக அவசரம் என்றாலே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளியே வர இயலும். அதுவும், பாதுகாப்பு அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் அவர்கள் இருப்பார்கள்.

உடல்நலக்குறைவு என்றால் அருகிலுள்ள மருத்துவமனையில், அவர்களுக்காகவே இடங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும். 11 நாட்களும் அவர்கள் வெளி உலகத்துடன் துண்டிக்கப்பட்டே இருப்பார்கள். அச்சகத்தின் உள்ளே ஒரு தொலைபேசி இருக்கும், அதில் உள்வரும் அழைப்பு வசதி மட்டுமே உண்டு. இந்த தொலைபேசி வழியாக பேசப்படும் எல்லா சொற்களும் துல்லியமாக கண்காணிக்கப்படும்.

நிதி அமைச்சருக்கு மட்டுமே எந்நேரத்திலும் உள்ளே செல்லும் அனுமதி உண்டு. நிதித்துறை செயலாளர்கள் கூட சிறப்பு அனுமதி பெற்றே உள்ளே செல்ல முடியும். அரசு அலுவலக கணினிகள் எப்போதுமே, தேசிய தகவலியல் மையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்.

ஆனால், வரவு-செலவு தகவல்கள் களவாட வாய்ப்பு உள்ளதால் இந்த 11 நாட்களும் அச்சகத்தில் உள்ள கணினிகள் மேற்கண்ட இணைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கும்.

 

இவ்வாறாக, உலகின் எவ்வித தொடர்பும் இல்லாமல் 11 நாட்கள் பணியாற்றும் ஊழியர்களை உற்சாகப்படுத்தவே அல்வா வழங்கும் முறை கொண்டுவரப்பட்டது. அதுவே, தற்போது வழக்கமாகிவிட்டது.

வரவு-செலவு சில விவரங்கள்:

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மத்திய பொது வரவு-செலவைப் பதிகை செய்திருக்கிறார்கள். அவர்கள் யார் என்று பலருக்கும் தெரியும்.

ஜவகர்லால் நேரு, அவரது மகள் இந்திரா காந்தி, மற்றும் ராஜீவ் காந்தி.

பொது வரவு-செலவு பதிகை செய்த ஒரே பெண் இந்திரா காந்தி.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மதியத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சுதந்திரம் அடைந்த பிறகு 1999ம் ஆண்டு வரை பொது பட்ஜெட் என்பது பிப்ரவரி மாதம் கடைசி நாளில் மாலை 5 மணிக்குத்தான் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

அதன்பிறகு பாஜக தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றதும், வாஜ்பாயி பிரதமரானார். மத்திய நிதியமைச்சராக யஷ்வந்த் சின்ஹா பொறுப்பேற்றார். அப்போதுதான் பட்ஜெட்டை முற்பகல் 11 மணிக்கு தாக்கல் செய்யும் நடைமுறை மாற்றப்பட்டது.

 

சுதந்திர இந்தியாவில் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்டில் மத்திய அரசின் மொத்த செலவு ரூ.164 கோடியாகும்.

முன்பு, பொது பட்ஜெட், ரயில்வே பட்ஜெட் என நாடாளுமன்றத்தில் இரண்டு பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்படும். ஆனால் தற்போது இரண்டு பட்ஜெட்டுகளும் ஒருங்கிணைக்கப்பட்டு பொது பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழ்தொடர்ஆண்டு-5119ம் (2017-2018) பொது வரவு-செலவு திட்டத்தில் சொல்லிக் கொள்ளும் படியான சேதிகள் இவைதாம்.

1. முதன்முறையாக பொது வரவு-செலவு உடன் தொடர்வண்டித் துறை வரவு-செலவு இணைக்கப்பட்;;டது.

2. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் வருமானம் பெறும் தனி நபர்களுக்கு வருமான வரி விகிதம் 10விழுக்காட்டில் இருந்து 5விழுக்காடாக குறைக்கப்பட்டது. வருமான வரி விலக்கு பெறுவதற்கான உச்ச வரம்பில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

3. ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வருமானம் பெறுபவர்களுக்கு 10விழுக்காடு கூடுதல் வரி விதிக்கப்பட்டது.

4. ரூ.3 லட்சத்துக்கு மேலான பரிவர்த்தனையை ரொக்கமாக மேற்கொள்ள தடை.

5. ஜார்க்கண்ட் மற்றும் குஜராத்தில் புதிதாக இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டது.

6. பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு நாட்டைவிட்டு தப்பியோடுபவர்களின் சொத்துக்களை முடக்க புதிய சட்டம் இயற்றப்படும். என்று தெரிவிக்கப் பட்டது, மல்லையா இன்னும் வெளி நாட்டில் பாதுகாப்பாகவே இருக்கிறார்.

7. வரவு-செலவு பதிகைக்காக அவை கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர் இ.அகமது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் அறிவிப்பு ஒன்றை வாசித்த மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன், வழக்கமாக அவை உறுப்பினர் மறைந்தால் அவை ஒத்திவைக்கப்படுவது மரபு. ஆனால், இன்று தமிழ்தொடர்ஆண்டு-5119ம் (2017 – 2018) வரவு-செலவு பதிகை செய்யப்படுவது என ஏற்கெனவே குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் திட்டமிடப்பட்டதால் இன்று வரவு-செலவு பதிகை செய்யப்படும். இதற்கு பதிலாக நாளை அவை ஒத்திவைக்கப்படும் என்றார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜூன் கார்கே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கடும் அமளிக்கு இடையே வரவு-செலவு காலை 11.08 மணிக்கு அருண் ஜேட்லி பதிகை செய்தார்.

பொதுவாக பாஜக ஆட்சியில் எளிய மக்களுக்கு எந்த திட்டங்களும் போடப் படாது என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி தான் எனவே தமிழ்தொடர்ஆண்டு-5120ம் (2018-2019) பாஜக அரசின் வரவு-செலவு திட்டத்தில் எளிய மக்களுக்கு, காகித பணமதிப்பிழப்பு, சரக்குசேவைவரி, இதைப் போன்ற புதிய ஆப்புகள் ஏதும் வராமல் இருந்தால் சரிதான் என்கின்றனர் பொது மக்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,675

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.