Show all

ரூ350 நாணயம் வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி! சீக்கிய மதக்குரு கோவிந்த்சிங் 350வது பிறந்தநாளுக்காக

14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கோவிந்த் சிங்! சீக்கிய மதத்தவரின் பத்து குருக்களில் பத்தாவது குருவும் அவர்களது இறுதி மனித குருவுமாவார். இவரே பிற்காலச் சீக்கிய மதக் கோட்பாடுகளுக்கு வித்திட்டவர் ஆவார். 

இவர் அரபி, பெர்சியன், சமற்கிருதம் போன்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். குதிரைச் சவாரி, பலவகைத் துப்பாக்கிகள், ஆயுதங்கள் முதலியவற்றைக் கையாள்வதில் சிறப்புப் பெற்று விளங்கினார்.

ஒன்பதாவது சீக்கிய குருவான குருதேக் பகதூரின் மகனான இவர் இந்தியாவின் பீகாரில் பாட்னாவில் பிறந்தவர். 

மொகாலயப் பேரரசர் அவுரங்கசீப்புடனான சீக்கியரின் மதப்போரில் தனது தந்தை, தாய், நான்கு மகன்களை இழந்தார். ஒன்பதாவது சீக்கிய குருவான குருதேக் பகதூர் இஸ்லாம் மதம் மாற எதிர்த்ததால் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, குடியிருப்புப் பகுதிகளில் தொங்கவிடப்பட்டார். 

நான் எனது தலையைத் தருவேன்; மதத்தையல்ல என்று தமது கழுத்தில் எழுதி வைத்திருந்த வாசகம் அப்போது சீக்கியர்களிடையே பிரபலமடைந்தது. ஒரு சீக்கியர், அவரது அறுபட்ட தலையுடன் அனந்தபூருக்கு தப்பிச் சென்றார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் குரு கோவிந்த் சிங் சீக்கியர்களை வலிமையுடைய மதமாக மாற்ற வழிவகை செய்தார்.

பஞ்சாபி மொழியில் சாண்டி தி-வார் எனும் நூலினை எழுதிய இவர் பாண்டா சாஹிப் எனும் மத வழிபாட்டு இடத்தை நிறுவினார். இங்கு மத போதனை, ஆயுதப்பயிற்சி மற்றும் ஹிந்தி, பெர்சியன், பஞ்சாபி மொழிகளைக் கற்பித்தார். ஆனந்த்பூர் சாகிப் வட்டாரத்தில் கேஷ்கர், ஃபாதேகர், லாப்கர் மற்றும் ஆனந்த்கர் என்னும் நான்கு கோட்டைகளைக் கட்டினார். இங்கு ஆயுதத் தயாரிப்பு மற்றும் ஆயுதப் பாதுகாப்பு போன்றவற்றுக்கான இடங்களையும் நிறுவினார்.

எதிரிகளிடமிருந்து சீக்கியர்களைக் காத்துக்கொள்ளும் வலிமையுடைய சமயமாக மாற்றினார். அவ்வமைப்பிற்கு கல்ச (தூய்மை) என்று பெயர் சூட்டினார். இவ்வமைப்பில் சேருபவரை அகாலி என்று அழைத்தார். அகாலி என்பதற்கு இறவாதவன் என்று பொருள். கடவுளின் சார்புள்ளவானாகப் பிறந்து பூமியில் அறத்தினை நிலைநாட்டுவதே முதன்மையான நோக்கம் என்று கூறினார். சீக்கியர் அனைவரும் சிங்கத்தினைப் போன்ற பலமும், அரசனைப் போன்ற சக்தியும், சுயமரியாதையும் உடையவர்கள் என்று குருகோவிந்த் சிங் முழங்கினார். முன்பு வழக்கமாயிருந்த சரண்பா{ஹல் எனும் ஞானஸ்நானம் வழங்கும் சடங்கினை மாற்றி அம்ருத்பாஹீல் எனும் புதிய சட்டத்தினைக் கொண்டுவந்தார். இந்த சடங்கினைச் செய்த பின்னரே அவர்கள் சீக்கியர்களாக மாறுவர் என்று சட்டங்கள் இயற்றினார். இச்சடங்கு முடித்த ஆண் தன் பெயரின்பின் சிங் (சிங்கம்) என்றும் பெண் கௌர் (பெண்சிங்கம்) என்றும் பெயரின் பின் இணைத்துக்கொள்ள வேண்டுமெனக் கட்டாயமாக்கினார்.

சீக்கிய குரு பதவிக்காக அவ்வப்போது ஏற்பட்ட மதப் பூசல்களைத் தடுப்பதற்காக ஒற்றை குரு முறையை குருகோவிந் சிங் அகற்றினார். அவருக்குப் பின் சீக்கிய மதப் புனித நூலான குரு கிரந்த சாஹிபே குரு என்று அறிவித்தார். குரு கிரந்த சாஹிபின் கடைசிப்பகுதியான தஸ எனும் பாகத்தை இவரே எழுதினார். இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றின் சில பகுதிகளும், சண்டி சரிதர், பகவதி தீவார், ராம் அவதார், துர்க ஸப்தஸதி ஆகிய ஹிந்து நூல்களையும் பஞ்சாபி மொழிக்கு மொழிப் பெயர்த்தார்.

சாதி, மத, இன மற்றும் பால்வழிப் பாகுபாடுகளையும் பிரித்து ஆள்வதையும் முடிவுக்குக் கொண்டு வர 'கால்சா' எனும் அமைப்பை நிறுவினார்.

சீக்கியத்தில் மாற்றம் ஏற்படுத்திய குரு கோவிந்த் சிங் சில கோட்பாடுகளை வகுத்தார். அதன் படி ஒவ்வொரு சீக்கிய ஆணும் கடவுளின் பிள்ளைகள் என்று உணர்வதற்காகத் தலைப்பாகையும் ஐந்து 'க' வையும் வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

1.கேஸ-(நீண்ட தலை முடி,தாடி) கடவுள் தன்னை எப்படி படைத்தாரோ அப்படியே ஏற்றுக் கொள்ள,

2.கங்க-(சீப்பு)ஒருவரின் மனதினையும் , ஆன்மாவினையும் தூய்மையாக வைத்திருப்பதற்கு,

3.கிர்ப்பான்-(குத்துவாள்)தன்னையும் மற்ற மக்களையும் பாதுகாக்க,

4.கச்-(அரைக்காற்சட்டை)ஒரு நல்ல வாழ்க்கை வாழ,

5.கர-(எஃகு காப்பு) நல்ல விஷயங்களைச் செய்யத் தூண்ட

ஐந்தும் முறையே தியாகம்,தூய்மை,ஆன்ம சுத்தி,புலனடக்கம்,நேர்மை ஆகியவற்றின் சின்னங்கள் என்று கூறினார்.

சீக்கியர் மது அருந்துதல், புகை பிடித்தல் கூடாது. நாள் தோறும் ஐந்துமுறை வழிபடுதல் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கு தானம் வட்டி வாங்காமை ஆகியவற்றை அவர்கள் கடைபிடித்துவருதலைக் கட்டாயமாக்கினார்.

குருகோவிந்த் சிங்கின் 350-வது பிறந்தநாளை முன்னிட்டு ரூ.350 நாணயத்தை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்கிறது. 

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: குருகோவிந்த் சிங்கின் 350-வது பிறந்தநாளையொட்டி, ரூ.350 நாணயம் வெளியிடப்பட உள்ளது. 44 மி.மீ., விட்டத்தில், 35 கிராம் எடையில் இந்த நாணயம் உருவாக்கப்படும். இதில் 50 விழுக்காடு அலாய் சில்வர், 40 விழுக்hடு செம்பு மற்றும் 5 விழுக்காடு துத்தநாகம் சேர்க்கப்பட்டிருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,740

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.