Show all

நட்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை வங்கிகளை, மூடும் திட்டம் ஏதும் இல்லையென்று ரிசர்வ் வங்கி தகவல்

06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகளை மூட ரிசர்வ் வங்கி முடிவெடுத்திருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் விளக்க அறிக்கையில், வாராக்கடன் அதிகரித்து, சில பொதுத் துறை வங்கிகள் நட்டத்தில் இயங்கி வருவதால், அதுபோன்ற வங்கிகளை, வங்கிகள் சீரமைப்பு நடவடிக்கையின் கீழ் மூட திட்டமிட்டுள்ளதாக சமூக தளங்களில் தகவல் பரவி வருகிறது.

மாநில வங்கிகளின் பலத்தை அதிகரிக்கும் வகையில் சில வங்கிகளை மூடுவதாகக் கூறுப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. வங்கிகளை மூடுவது என்ற வாதமே எழவில்லை. இதுபோன்ற எந்த வதந்திகளையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம்.

நட்டத்தில் இயங்கும் வங்கிகளுக்கு 2.11 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி அளித்து, அதனை லாபம் பெறும் பாதையில் பயணிக்கச் செய்யும் திட்டத்தைத் தான் நடுவண் அரசு செயல்படுத்தி வருகிறது. பொதுத் துறை வங்கிகளை பலப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, வங்கிகளை மூடும் பேச்சுக்கே இடமில்லை என்று ரிசர்வ் வங்கித் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென்று நள்ளிரவில் ரூபாய்தாள் செல்லாது என்று மோடி அறிவித்தது போல் திடீரென்று பொதுத்துறை வங்கிகள் இயங்காது என்று ஏன் மோடி அரசு தெரிவிக்காது என்று பொதுமக்கள் அச்சத்திலேயே தொடர்கிறார்கள்: பத்து ரூபாய் நாணயம் சொல்லுபடியாகும் என்று ரிசர்வ்வங்கி எவ்வளவு வலியுறுத்தியும் இது வரை பொதுமக்கள் நம்பிக்கையில்லாமல் இருப்பது போலவே. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள்! இந்திய வரலாற்றில் பொது மக்களின் ஆதாயத்தின் அடையாளமான ரூபாய் தாளை செல்லாது என்று அறிவிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப் படும் அரசுக்கு என்ன அதிகாரம் இருக்க முடியும் என்றேதாம் மக்கள் புலம்பிக் கொண்டேயிருக்கிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,643

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.