Show all

நீருக்காக ஊருக்குள் நுழையும் வனவிலங்குகள்! மேட்டூர் அருகே பாலாறு ஓடையாக மாறிய அவலம்

06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, தமிழக கர்நாடக மாநிலங்களின் எல்லைக்கோடாக உள்ள பாலாறு, காவிரியின் துணை ஆறாகும். இருமாநில எல்லை வனப்பகுதியில் பெய்யும் மழைநீர், காட்டாற்றில் அடித்து வரப்பட்டு அடிப்பாலாறு என்னுமிடத்தில் காவிரியில் கலக்கிறது. தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்க கர்நாடகம் மறுத்தாலும், பாலாறு மூலம் ஆண்டுதோறும் கணிசமான அளவு தண்ணீர், மேட்டூர் அணைக்கு வந்து சேரும்.

இரு மாநில எல்லையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளின் தலையாய நீராதாரமாக பாலாறு விளங்கி வருகிறது.

இந்நிலையில், கடந்த சில கிழமைகளாக பாலாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், போதிய நீர்வரத்தின்றி பாலாறு நீரோடையாக மாறி வருகிறது. இதனால், யானை உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர் தேடி, ஊருக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘யானைகள் ஊருக்குள் நுழைந்தால் பயிர் சேதத்துடன், உயிர்சேதமும் ஏற்பட வாய்ப்புள்ளது. மான்கள் தண்ணீர் தேடி கிராமங்களில் நுழைந்தால் வேட்டைக்காரர்களிடம் சிக்கியும், நாய்களிடம் கடிபட்டும் உயிரிழக்கும். எனவே, வன விலங்குகளுக்கு வனப்பகுதியில் தேவையான தண்ணீர் கிடைக்க, தொட்டி கட்ட வேண்டும். மேலும், தடுப்பணைகளில் தண்ணீரை தேக்கி வைக்கவும் வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,643

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.