Show all

நீங்கள் பயன் படுத்தி வரும் அனைத்து மாநில அடையாளங்களோடும் நடுவண் அரசின் ஆதார் இணைப்பு கட்டாயம்

17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: பாஜகதான் இந்தியாவின் நிரந்தர ஆளும் கட்சி என்ற நம்பிக்கையில் மோடி காய் நகர்த்தி வருகிறார். அதன் பொருட்டு ஒட்டு மொத்த இந்திய மக்களையும் மாநில அரசுகளைத் தாண்டி தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் முகமாகவே ஆதாரை கடுமையாக நிர்பந்தித்துக் கொண்டிருக்கிறார். மாநிலத்தின் வரி வாங்கும் உரமையை ஒரே வரி சரக்கு,சேவை வரி என்ற தலைப்பில் பிடுங்கிக் கொண்டார்.

தட்டிக் கேட்க காங்கிரசுக்கு தகுதி இல்லவேயில்லை. சில மாநிலக் கட்சிகள் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தாலும் நடுவண் அரசில் மாநிலக் கட்சிகளின் கூட்டாட்சியை உருவாக்குவதே தீர்வு என்ற அறிவோ அனுபவமோ இல்லை.

நடுவண் அரசில் இருப்பவர்கள் எந்தத் தவறு செய்தாலும் தண்டிப்பதற்கு அதிகார அமைப்பு இந்தியாவில் எதுவும் இல்லை. அதனால் துணிச்சல் நிறைந்த மோடிக்கு ஊடகங்களும், அனைத்து நிருவாக அமைப்புகளும் கட்டுப் பட்டேயிருக்கின்றன.

இதனாலேயே மோடி அரசு வங்கி கணக்குகள், தொலைபேசி எண் பான் எண், குடும்ப அடையாள அட்டை, இப்படி எல்லாவற்றோடும் ஆதார் எண் இணைப்பது அவசியம் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதை எதிர்த்து உச்ச அறங்கூற்று மன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அறங்கூற்று மன்றம் சட்டம் போடும் அமைப்பல்லவே! நடுவண் அரசு போடுகிற சட்டத்;தைப் பாதுகாக்கிற அமைப்புதானே. நடுவண் அரசைத்தான் நாம் மோடி கையில் பிணைத்திருக்கிறோமே.

ஆக ஆதார் எண்ணை எல்லாவற்றிலும் இருந்து தவிர்க்க ஆட்சி மாற்றத்தை தவிர வேறு வழியே கிடையாது.

தற்போதைய நிலையில், வங்கி கணக்கு, செல்பேசிஎண் உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண் இணைக்க கடைசி நாள் நெருங்கி வருகிறது. அதன் விவரம் வருமாறு:

பான் அட்டையுடன் ஆதார் எண் இணைக்காவிட்டால், வருமான வரி பதிகை செய்ய இயலாமல் போகும்.

வங்கிக்கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க விட்டால் வங்கிகணக்குகள் செயல்படாமல் முடக்கி வைக்கப்படும்.

பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் பண்ட் கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்க விட்டால் அந்த கணக்குகள் முடக்கி வைக்கப்படும்.

காப்பீட்டு பாலிசிகளுடன் ஆதார் எண்ணை இணைக்க விட்;டால் பாலிசி முடங்கி விடும்.

அஞ்சல் நிலைய திட்டங்கள், ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி, பத்திரங்கள் அனைத்திற்கும் ஆதார் எண் இணைக்க விட்டால் அவை அனைத்து கணக்குள் செயல்படாமல் நிறுத்தி வைக்கப்படும்.

இவை அனைத்திற்கும் இணைப்பிற்கு கடைசி நாள் 16,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119 (31.12.2017)

செல்பேசி எண்களுடன் ஆதார் எண் இணைப்பதற்கு 24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119 (06.02.2018) கடைசி நாள். அதன் பின் தொலைபேசி எண் செயல்படாது.

சமையல் எரிவாயு, குடும்ப அட்டை உள்ளிட்ட மானியங்கள் பெற ஆதார் எண் இணைப்பதற்கு இறுதி நாள் 17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119 (31.03.2018) இறுதி நாள். அதன் பின் மானியம் மற்றும் நலத்திட்ட உதவிகளை பெற முடியாமல் போகக்கூடும்.

ஆதார் எண் இதுவரை பெறாதவர்களுக்கு ஆதார் பெற, ஆதார் எண் உறுதியாக கேட்க மாட்டார்கள் ஆனால் மற்ற அடையாளம் ஏதாவதொன்று உறுதியாக தேவை. ஆக ஆதாருக்கே அவை ஏதாவதொன்று தான் அடிப்படை. ஆக ஆதார் அடிப்படையல்ல என்பதுதான் உண்மை. நடுவண் அரசு கணக்கெடுத்து வழங்குவதல்ல ஆதார். மாநில அரசிடம் இருந்து உரிமையைத் தட்டிப் பறிப்பதுதான் ஆதார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,625

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.