Show all

17இடைத் தேர்தல்களில் தொகுதிகள் இழந்துள்ள, பாஜக மோடி அரசின் மீது, இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்

02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் பாஜக அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இன்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறது. இத்தீர்மானத்தை தெலுங்கு தேசம் ஆதரிக்கும் என அக்கட்சியின் தலைவரும் ஆந்திரா முதல்வருமான சந்திரபாபு நாயுடுவும் அறிவித்துள்ளார்.

தெலுங்கானா பிரிவினையின் போது ஆந்திராவுக்கு சிறப்புத் தகுதி வழங்கப்படும் என நடுவண் அரசு உறுதி அளித்தது. ஆனால் ஆந்திராவுக்கு இதுவரை சிறப்புத் தகுதி வழங்கப்படவில்லை.

இதனைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் பாஜக அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியது.

இதனால் நடுவண் அரசில் ஆளும் பாஜக அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என்பது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு. இந்த நிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வரப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்புஅறிக்கையையும் அக்கட்சி அளித்துள்ளது.

இது தலைமை அமைச்சர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக முதலாவது நம்பிக்கை இல்லா தீர்மானம். இத்தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக தெலுங்குதேசம் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதையடுத்து தேவைப்பட்டால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கொண்டுவரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிப்போம் என ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார். தற்போது வரை தெலுங்குதேசம் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறது. அண்மையில் இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு நடுவண் அரசில் இருந்து தெலுங்குதேசம் அமைச்சர்களும் ஆந்திரா அரசில் இருந்து பாஜக அமைச்சர்களும் பதவி விலகி இருந்தனர்.

இன்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தெலுங்குதேசம் ஆதரித்தால் அதிகாரப்பூர்வமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு தெலுங்குதேசம் விலகும். தமிழ்தொடர்ஆண்டு-5115ல் (2014) நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 282 இடங்களைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற 17 இடைத்தேர்தல்களில் அடுத்தடுத்து பாஜக தோல்வி அடைந்துள்ளது. இதனால் நாடாளுமன்றத்தில் பேரவைத்தலைவர் இல்லாமல் பாஜகவின் பலம் 272. ஏற்கனவே பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை இல்லா தீர்மானம் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,728.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.