Show all

சோதனை மேல் சோதனை! கடந்த கிழமை நரேந்திர மோடி நாட்டுக்கு வழங்கிய 'வந்தே இந்தியா விரைவுத் தொடர்வண்டி'க்கு

முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, வந்தே இந்தியா தொடர்வண்டிச் சேவையை அண்மையில்தான் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி நாட்டுக்கு வழங்கினார். இப்படி வழங்கப்பட்ட சில நாட்களிலேயே இந்தத் தொடர்வண்டிகள் இன்னல்களை எதிர்கொண்டுள்ளன.

21,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும், முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, வந்தே இந்தியா தொடர்வண்டிச் சேவையை அண்மையில்தான் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி நாட்டுக்கு வழங்கினார்.

இப்படி வழங்கப்பட்ட சில நாட்களிலேயே இந்தத் தொடர்வண்டிகள் இன்னல்களை எதிர்கொண்டுள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்னர் தண்டவாளத்தில் குறுக்கே வந்த எருமைகள் மீது தொடர்வண்டி மோதியது. இதில் மாடுகள் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மிகவும் தனித்துவம் வாய்ந்த தயாரிப்பாக கருதப்பட்ட இந்த வந்தே இந்தியா தொடர்வண்டியின் முன்பாகம் அதே இடத்தில் கழன்று விழுந்தது.

தொடர்வண்டியின் முன்பாகம் கழன்று விழுந்தது குறித்து இணையஆர்வலர்கள் பலர் தொடர்வண்டி உற்பத்தி குறித்து கடுமையாக கிண்டலடித்து வந்தனர். எதிர்க்கட்சிகளும் இதே வகையான திறனாய்;வை முன்வைத்தது. 

இந்த நிகழ்வில் எருமை மாடுகளின் அடையாளம் தெரியாத உரிமையாளர் மீது தொடர்வண்டிக் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த விபத்தையடுத்து தொடர்வண்டியின் முன் பாகம் அன்றே சரி செய்யப்பட்டது. இதில் தொடர்வண்டியின் இயந்திரப் பகுதிக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று தொடர்வண்டித் துறை தெரிவித்திருந்தது.

இந்த நிகழ்வின் பரபரப்பு அடங்குவதற்குள், மற்றொரு நிகழ்வு அரங்கேறியது. அதாவது, காந்திநகர்-மும்பை இடையே நேற்று இந்த தொடர்வண்டி இயக்கப்பட்டபோது குறுக்கே பசு மாடு வந்த நிலையில் இதேபோல தொடர்வண்டியின் முன்பாகம் சேதமடைந்தது. இவ்வாறு தொடர்ந்து இரண்டு நாட்கள் விபத்துக்களாக நிகழ்ந்து வரும் நிலையில், மூன்றாவது நாளான இன்று தொடர்வண்டியின் சக்கரத்தில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக தொடர்வண்டி பாதியிலேயே நின்றுள்ளது.

இந்த நிகழ்வு காலை 7.30 மணிக்கு நடந்துள்ளது. தொடர்வண்டியைப் பரிசோதித்த ஊழியர்கள் அங்கிருந்து தொடர்வண்டியை மெதுவாக நகர்த்தி குர்ஜா தொடர்வண்டி நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து அங்கு நூற்றாண்டு (சதாப்தி) விரைவுத் தொடர்வண்டி  கொண்டுவரப்பட்டு பயணிகள் அந்தத் தொடர்வண்டியில் மாற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,395.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.