Show all

இராசராசசோழன் காலத்தில் ஹிந்து மதம் என்ற பெயர் கிடையாதே! தெளிவுபடுத்தும் நடிகர் கமல்ஹாசன்

இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்திருந்த, கலை என்பதே ஒரு அரசியல்தான். திராவிட இயக்கம் திரைத்துறையைக் கையில் எடுத்ததால் தான் இன்னமும் தமிழ்நாடு மதச்சார்பற்ற மாநிலமாக உள்ளது. என்ற கருத்து மதவாதிகள் கொந்தளிப்போடும், மற்றோரின் வரலாற்று அலசலோடும் தமிழ்நாட்டை தெளிவாக அடையாளப் படுத்திடக் காரணமாகிறது.

19,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தெய்வத்திரு கல்கி எழுதிய நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம், உலகம் முழுவதும் கடந்த கிழமை திரையரங்குகளில் வெளியானது. பேரளவான பொருட்செலவில் தயாராகியுள்ள இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிசா உள்பட பலர் நடித்துள்ளனர். 

திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழ்நாடு மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு நல்ல ஈட்டல் கிடைத்துள்ளது. 

இதனிடையே அண்மையில் இயக்குனர் வெற்றிமாறன் கலை என்பதே ஒரு அரசியல்தான். திராவிட இயக்கம் திரைத்துறையைக் கையில் எடுத்ததால் தான் இன்னமும் தமிழ்நாடு மதச்சார்பற்ற மாநிலமாக உள்ளது. திரைத்துறை என்பது பொதுமக்களை எளிதாகச் சென்றடைய கூடிய ஒரு கலை. திரைத்துறையை திராவிட இயக்கங்கள் கையில் எடுக்கும்பேது தான் இலக்கியத் துறையை சேர்ந்தவர்கள் 'கலை கலைக்காகதான், கலை மக்களுக்கானது இல்லை' என்று எதிர்நிலை பேணினார்கள்.

அழகியல் பற்றி நிறைய பேசினார்கள். கலையில் அழகியல் முதன்மையானதுதான். ஆனால், மக்களிடம் இருந்து விலகி எந்த கலையும் முழுமையடையாது. மக்களுக்காகதான் கலை. மக்களை பிரதிபலிப்பதுதான் கலை. இந்தக் கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு விரைவில் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும்.

தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்களைப் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, இராசராச சோழனை ஹிந்து அரசனாக்குவது, இப்படித் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது திரைத்துறையிலும் நடக்கும். திரைத்துறையிலும் நிறைய அடையாளங்களை காட்டுகிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும் என்று ஒரு படவிழாவில் பேசியிருந்தது- தற்போதுவெளியாகி வெற்றிநடைபோடும் பொன்னியின் செல்வன் படத்தின் கதைத்தலைவன் இராசராச சோழன் என்பதால் அதனோடு தொடர்பு படுத்துவது பலரின் பேசுபொருளாய் தொடர்கிறது.

நடிகர் கமல்ஹாசன் சென்னையில் நேற்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை நடிகர் கார்த்தி, நடிகர் விக்ரம் ஆகியோருடன் இணைந்து பார்த்துவிட்டு, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் வெற்றிமாறன் கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், இராசராசசோழன் காலத்தில் ஹிந்து மதம் என்ற பெயர் கிடையாது. சைவம், வைணவம், சமணம் போன்ற சமயங்கள் இருந்தன. ஹிந்து என்பது ஆங்கிலேயர்கள் ஒருங்கிணைப்பிற்கு எடுத்துக்கொண்ட பெயர். 

பொன்னியின் செல்வன் திரைப்படம் ஒரு வரலாற்றுப் புனைவு. இங்கு நாம் வரலாற்றைப் புனைய வேண்டாம், திரிக்க வேண்டாம், மத அரசியலை திணிக்கவும் வேண்டாம். நல்ல கலைஞர்களை கொண்டாடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,393.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.