Show all

உச்ச நீதிமன்றம் தனது தவறுகளைத் திருத்திக் கொள்ள திறந்த மனதுடன் இருக்க வேண்டும்

அரசு விளம்பரங்களில் பிரதமர், குடியரசுத் தலைவர், இந்தியாவின் தலைமை நீதிபதி ஆகியோர் தவிர மாநில முதல்வர் உட்பட பிற அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெறக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனுவில் நடுவண் அரசுடன் தமிழக அரசும் இணைந்தது.

 

இது குறித்து இன்று நடைபெற்ற உச்ச நீதிமன்ற விசாரணையில்,

நடுவண் அரசு, தமிழக அரசை பிரதிநிதித்துவம் செய்த அட்டார்னி ஜெனரல் முகுல் ரொஹாட்கி,

     ‘ஒரு கூட்டாட்சி அமைப்பில் பிரதமருக்கும் முதல்வருக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. எனவே பிரதமர், குடியரசுத் தலைவர், தலைமை நீதிபதி ஆகியோர் மட்டும் அரசு விளம்பரங்களில் இடம்பெறலாம் என்று நீங்கள் கூறுவதற்கு எந்த ஒரு அடிப்படையும் இல்லை. மேலும் ஒரு அமைச்சருக்கும் மற்றொரு அமைச்சருக்கும் கூட உள்ளார்ந்த வித்தியாசம் ஏதுமில்லை.

 

எனவே 5 ஆண்டுகால ஆட்சியில் அரசு விளம்பரங்களில் பிரதமர் புகைப்படம் மட்டும் இடம்பெறலாம் என்றால் மற்ற அமைச்சர்கள் முகமற்றவர்கள், பெயரற்றவர்களாகி விடுகின்றனர். இது மோசமான விளைவையே ஏற்படுத்துவதோடு, ஒற்றை ஆளுமை வழிபாட்டுக்கு இட்டுச் செல்லும்.

 

மேலும் காரசாரமான வாசகங்களை விட ஒரு விளம்பரத்தில் புகைப்படம் ஒரு காட்சி ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. அத்துடன், அரசியல் சாசனம் பிரிவு 19 (1)-ன் கீழ் இது அடிப்படை உரிமைகளின் கீழ் வருகிறது. அதாவது, அரசு விளம்பரங்களில் தகவல் என்பது வெறும் வாசகம் மட்டுமல்ல புகைப்படமும்தான்.

 

மேலும், போலியோ, சுகாதாரக் கொள்கைகள், பண்பாட்டு நிகழ்வுகள் ஆகியவை ஒரு நாட்டை ஒருங்கிணைக்கும் கூறுகளாகும். இதற்கு நன்கு தெரிந்த முகங்கள் அவசியம். எனவேதான் மக்கள் அரசு விளம்பரங்களை உற்று நோக்குவர். எனவே இந்தப் புனிதத்தை நீதிமன்றம் கூடாது என்றால் பிரதமர், குடியரசுத் தலைவர், தலைமை நீதிபதி புகைப்படங்களுக்கு மட்டும் விலக்கு அளித்தது எவ்வாறு?

 

எனவே, உச்ச நீதிமன்றம் தனது தவறுகளையும் திருத்திக் கொள்ள திறந்த மனதுடன் இருக்க வேண்டும்’

என்று வாதிட்டார்.

 

இது குறித்த முந்தைய விசாரணை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்விடம் வந்த போது, அரசு விளம்பரங்களில் பிரதமர், குடியரசுத் தலைவர், தலைமை நீதிபதி நீங்கலாக மாநில முதல்வர்கள் உட்பட எந்த ஒரு அரசியல் தலைவர்களின் படங்களும் இடம்பெறக்கூடாது என்று தீர்ப்பளித்திருந்தது.

 

இதனையடுத்து மத்திய அரசு உட்பட, தமிழக அரசு, கர்நாடகம், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநில அரசுகளும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவை மறுபரிசீலனை செய்ய கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.