Show all

கோவனை விடுதலை செய்யக்கோரி டெல்லியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மூடு டாஸ்மாக்கை மூடு என்ற பாடலைப் பாடிய பாடகர் கோவன் தேசத்துரோக வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரை விடுதலை செய்யக்கோரி டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தின் முன்பு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொறுப்பாளரும், பாடகருமான கோவன் தேசத்துரோக வழக்கில் சில நாட்களுக்கு முன்பு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் திருச்சியில் கைது செய்யப்பட்டார். பின்னர் விசாரணைக்காக சென்னைக்கு கொண்டுவரபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

மதுவிலக்கை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவர் பாடிய பிரசார பாடலில் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எதிராக பிரச்னைக்குரிய கருத்துக்கள் இருந்ததால் அவரைக் கைது செய்துள்ளதாக போலீஸ் தரப்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில் கோவனை விடுதலை செய்யக்கோரி நேற்று டெல்லி பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தில்  பயிலும் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

அப்போது தமிழக அரசுக்கு எதிராக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்தப்  போராட்டத்தில் டெல்லியில் படிக்கும் இலங்கையைச் சேர்ந்த மாணவர்களும், தமிழ்நாடு  மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தால் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அப்போது மாணவர்கள் தமிழ்நாடு இல்லத்தின் உள்ளே நுழையாதபடி சற்று தூரத்தில் இருந்தபோதே அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.; 100க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பில் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.