Show all

தமிழ்நாட்டில் காலூன்ற பாஜக பகல் கனவு காண்கிறது: அகிலஇந்திய காங்கிரஸ் செய்திதொடர்பாளர் குஷ்ப

தமிழ்நாட்டில் காலூன்ற பாஜக பகல் கனவு காண்கிறது என்று நடிகையும் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கூறினார்.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 127வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவனில், நேருவின் உருவப் படத்திற்கு அக்கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் குஷ்பு கூறுகையில்,

நேருவின் பிறந்தநாளை குழந்தைகள் தினமாக அறிவித்தார்கள். பள்ளியில் படிக்கும்போது நவபாரத சிற்பி நேரு என்று சொல்லி தந்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் குழந்தைகள் தினத்தை மத்திய, மாநில அரசுகள் கொண்டாடுவதில்லை என்று குஷ்பு குற்றஞ் சாட்டியுள்ளார்.

காந்தி, நேரு, வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்கள் எல்லாம் வேற்றுமையில் ஒற்றுமை, சகிப்புதன்மை போன்றவற்றைத் சொல்லித் தந்தார்கள்.

ஆனால் இப்போது சகிப்புதன்மை குறைந்து விட்டது. பிரதமர் மோடி லண்டனுக்கு சென்று சகிப்பு தன்மையைப் பற்றி பேசுகிறார். அங்கு திரண்ட கூட்டம் அங்குள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். அவர்கள் அந்த நாட்டுக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள்.

ஆனால் மோடிக்கு ஓட்டுப்போட்ட இந்திய மக்களிடம் சகிப்புத்தன்மை பற்றி அவரால் பேச முடியவில்லை.

கடந்த ஆட்சி காலங்களில் அங்கொன்றும், இங்கொன்றுமாக சகிக்க முடியாத சில சம்பவங்கள் நடந்தாலும் அதை அரசாங்கம் தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்தது. ஆனால் தற்போது பிரதமர் மோடி மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.

பாஜகவை ஆர்.எஸ்.எஸ். இயக்குகிறது. இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் எண்ணிக்கையில் அதிகமாகி வருகின்றனர். எனவே இந்துக்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற உணர்வோடு பிரச்சினையை தூண்டி வருகிறார்கள். எனவே மக்கள் பாஜகவின் மீது நம்பிக்கையை இழந்து விட்டனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த பிகார் தேர்தல் முடிவு அதை தெளிவாகக் காட்டுகிறது. இந்தியா முழுவதும் நம்பிக்கை இழந்து விட்ட நிலையில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப் போவதாக அந்தக் கட்சி கூறுவது பகல் கனவாகும். தமிழகத்தில் பாஜக காலூன்றவே முடியாது என்று கூறினார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.