Show all

சித்தராமையா அரசு முனைப்பு! லிங்காயத்து பிரிவினருக்கு தனி மத அங்கீகாரம்

05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திமுகவினால் ஈடுபாட்டோடு அன்று எடுக்கப் பட்ட முயற்சிகளைத் தேடித் தேடி அரங்கேற்றுகிறார். சித்தராமையா. இது ஈடுபாடா! அரசியலா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

பாஜகவிற்கு கடுப்பேற்றும் முயற்சியாக, லிங்காயத்து பிரிவினருக்கு தனி மத அங்கீகாரம் கொடுக்க சித்தராமையா தலைமையிலான கர்நாடக காங்கிரஸ் அரசு முன்வந்துள்ளது. கர்நாடகாவில் லிங்காயத்து, ஒக்கலிகர் (கவுடா), குருபர், தலித் ஆகிய நான்கு சாதியினர் அதிகம் வாழ்கிறார்கள். துணை பிரிவான வீர சைவர்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், எண்ணிக்கை அடிப்படையில், லிங்காயத்து பிரிவினர்தான் அதிக மக்கள் தொகையினர். சமூக, பொருளாதார ரீதியாக மேம்பட்ட நிலையில் உள்ளனர் லிங்காயத்துகள். சமூக புரட்சியாளர் பசவண்ணர் வழியில், சிவனை வழிபடுபவர்கள் லிங்காயத்துகள். எந்த சாதியினராக இருந்தாலும், லிங்கத்தை சடங்குகளோடு பீடத்தில் பொருத்தினால் லிங்காயத்தாக மாற முடியும். எனவே சாதி பிரிவு என்பதை தாண்டி, இது ஒரு வழிபாட்டு முறையாகத்தான் பார்க்கப்பட்டது. 

இவர்களில் பெரும்பாலானோர் பாஜகவுக்கே வாக்களித்து வருபவர்கள். பிற கட்சிகளிலும் லிங்காயத்து சாதியை சேர்ந்த முதன்மையான பிரமுகர்கள் இருந்தாலும், பாஜகவை சேர்ந்த, லிங்காயத்து பிரிவை சேர்ந்த, முன்னாள் முதல்வர்களான எடியூரப்பா மற்றும் ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர் லிங்காயத்துக்கள் வாக்குகளை கொத்தாக ஈர்த்து வந்தனர். 

இந்த நிலையில்தான், லிங்காயத்துகளை தனி மதமாக அங்கீகாரம் அளிப்பது குறித்து ஆய்வு செய்ய, சித்தராமையா தலைமையிலான அரசு ஓய்வுபெற்ற உயர்அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் நாகமோகன்தாஸ் தலைமையில் குழு அமைத்தது. இதற்கு, வீரசைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், பசவண்ணர் காட்டிய வழியில் சிவனை வழிபடுவோர் ஆதரவு தெரிவித்தனர். மூன்று மாதங்களுக்கு முன்பு நாகமோகன்தாஸ் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தார். எதிர்பார்த்தபடியே, லிங்காயத்துகளை தனி மதமாக அங்கீகாரம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தார். 

இன்று நடைபெற்ற கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில், நாகமோகன்தாஸ் அறிக்கையை ஏற்பது என்றும், நடுவண் அரசு இதற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. கர்நாடக அரசு திட்டப்படி, லிங்காயத்துகளுக்கு, முஸ்லிம்களை போன்ற சிறுபான்மை மதம் என்ற அந்தஸ்து வழங்கப்படும். இதனால் லிங்காயத்து சாதியினர் பல சலுகைகளை அனுபவிக்க முடியும். எனவே சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது லிங்காயத்துகளின் பாசப்பார்வை விழுந்துள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களே இருப்பதால், சித்தராமையாவும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்.

ஹிந்தி திணிப்புக்கு எதிராக கன்னட மொழி உணர்வாளர்கள் போராட்டம் நடத்தியபோது அதற்கு ஊக்கம் கொடுத்தார் சித்தராமையா. ஹிந்திக்கு ஆதரவாக பேசி, வாங்கிக்கட்டியது பாஜக. கர்நாடகாவிற்கு தனி கொடியை உருவாக்கி நடுவண் அரசின் அங்கீகாரத்திற்கு அனுப்பி வைத்துள்ளார் சித்தராமையா.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,731.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.