Show all

பாஜகவின் தெனாவெட்டு! மதச்சார்பற்ற மக்களாட்சி நாட்டில், இராமன் ஆட்சிக்கான தேர்ப்பயணம்

05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: விஷ்வ ஹிந்து பரிஷத் என்பது பாஜகவின் துணை அமைப்பு ஆகும். அந்த அமைப்பின் சார்பில், இராமரை அலங்கரித்து இந்தியா முழுவதும், அவரின் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது கனவாக, தேர்போன்ற அமைப்பில், வைத்து பயணம் வருகின்றனர். அயோத்தியில் தொடங்கி 5 மாநிலங்களைக் கடந்து நாளை காலை தமிழகம் வருகிறது. கேரள மாநிலம் புனலுரில், இருந்து புளியரை, செங்கோட்டை வழியாக தமிழகத்திற்கு நாளை காலை தேர் வருகின்றது. மேலும் இராமன் ஆட்சிக்கான தேர்ப்பயணத்திற்கு புளியரை பகுதியில் வைத்து வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர் வாசுதேவநல்லூர் வழியாக நாளை பிற்பகல் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடைகின்றது.

இராமன் ஆட்சிக்கான தேர்ப்பயணம் தொடர்ந்து நாளை மதுரை வழியாக ஞாயிறு அன்று ராமேசுவரத்தில் நிறைவு பெறுகிறது. இந்த இராமன் ஆட்சிக்கான தேர்ப்பயணத்திற்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகத்திற்குள் தேர் நுழையும் பகுதியான செங்கோட்டையில் இராமன் ஆட்சிக்கான தேர்ப்பயணத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடவும் பல்வேறு அமைப்புகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கி வருகிற  வெள்ளிக்  கிழமை வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் இராமன் ஆட்சிக்கான தேர்ப்பயணத்திற்கு பல அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இராமன் ஆட்சிக்கான தேர்ப்பயணம்; செல்லும் வழியெங்கும் பலத்த காவல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பழைய காலத்தில் அரசர்கள் இப்படி குதிரை மற்றும் தேரில் தங்கள் ஆட்சிப் பகுதியில், பெருமிதமாக தம் அதிகாரத்தை புலப்படுத்துவதற்காக தேர் மற்றும் குதிரைப் பயணம் வருவார்கள். 

தமிழர் வீரத்தைப் பழித்துப் பேசிய கனக விசயரை தலையில் கல் சுமக்கச் செய்ய இமயம் வரை சேரன் செங்குட்டுவன் பயணித்தது இப்படித்தான்.  மக்களாட்சி நடைபெறும் ஒரு மதச்சார்பற்ற நாட்டில், இராமன் ஆட்சிக்கான தேர்ப்பயணம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு, இதுவெல்லாம் பாஜகவின் தெனாவெட்டுத் தனம்தான்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,731.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.