Show all

மோடி இல்லாத இந்தியா! மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்ரே இந்திய மக்களுக்கு அழைப்பு

05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் ‘காங்கிரஸ் முக்த் பாரத்’ என்ற முழக்கத்தை முன் வைத்து பாஜகவின் தலைமை அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடி கருத்துப் பரப்புதல் செய்தார்.

காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது அதன் பொருள்.

நடுநிலையாளர்கள் இதை கண்டித்தனர். எதிர்க்கட்சி கூட இல்லாமல் இருக்க வேண்டும் என்பது, மக்களாட்சித் தத்துவத்திற்கு விடுக்கப்படும் சவால் என அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் 21 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக மிசோராம், பஞ்சாப் மற்றும் கர்நாடகாவில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியை எஞ்ச விட்டுள்ளது. 

இது ஒருபுறம் எனில், வரும் பாராளுமன்றத் தேர்தலுக்குள் ‘மோடி முக்த் பாரத்’ அதாவது மோடி இல்லாத இந்தியா என்ற முழக்கத்தை மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்ரே முன் வைத்துள்ளார். மும்பையில் நடந்த கட்சி பேரணியொன்றில் இந்த முழக்கத்தை அவர் முன் வைத்தார். நரேந்திர மோடி அரசால் பொய் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளதால் நாடு முழுக்க மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

நாம் ஆங்கிலேயரிடம் பெற்ற விடுதலை, நெருக்கடி காலத்து இந்திராவிடம் இருந்து பெற்ற விடுதலையை அடுத்து தற்போது நாம் மூன்றாவது விடுதலையை நோக்கி பயணிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். மோடியிடமிருந்து இந்த நாட்டுக்கு விடுதலை கிடைக்க வேண்டியுள்ளது. மோடி அரசு விலக்கப்பட்ட பிறகு, பண மதிப்பிழப்பு குறித்து விசாரணை நடத்தினால், விடுதலை பெற்ற இந்தியா கண்ட மிகப்பெரிய ஊழல் அது, என்பது தெரியவரும்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு உச்சஅறங்கூற்றுமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால், இனிமேல் அது தொடர்ச்சியாக பேசப்படும். மத கலவரங்களை உருவாக்க அது பயன்படுத்தப்படும். அயோத்தியில் ராமருக்கு கோயில் வேண்டும் என்பதுதான் நமது ஆசையும். ஆனால், தேர்தலுக்காகவும், மக்களை பிளவுபடுத்தி வாக்குகளை பெறுவதற்காகவும், ராமரை பாஜக பயன்படுத்துவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இவ்வாறு ராஜ்தாக்ரே தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,731.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.