Show all

நீதித் துறை வெள்ளையர்களால் உருவாக்கப் பட்ட சட்ட நிருவாகம் என்பதால் தானோ

சென்னை உயர்நீதிமன்ற நீதிஅரசராக இருந்தவர் சி.எஸ்.கர்ணன். இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். தலைமை நீதிஅரசர் பிறப்பித்த உத்தரவை வழக்காக எடுத்து, அதற்கு தடை விதித்தார் கர்ணன். இதுதான் கர்ணன் எடுத்த முதல் சர்ச்சைக்குரிய நடவடிக்கை.

     இதுகுறித்து, உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதும், கர்ணன் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு, அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். இருப்பினும்விடவில்லை, கர்ணன்.

     இந்த உத்தரவை எதிர்த்து பிரதமர் அலுவலகம், உச்சநீதிமன்ற தலைமை நீதிஅரசர் உள்ளிட்டோருக்கு புகார் மனுக்களை அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார் கர்ணன்.

     மேலும், சென்னை உயர் நீதிமன்ற நீதிஅரசர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை எழுப்பினார் கர்ணன். அந்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமருக்கும் கடிதம் எழுதியிருந்தார். தான் ஒரு தலித் என்பதால் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (அப்போதைய) சஞ்சய் கிஷண் கவுல் தன்னை அவமரியாதை செய்வதாகவும், ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.

     இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இவ்வழக்கில்தான் தற்போது கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். இந்திய வரலாற்றிலேயே உயர்நீதிமன்ற நீதிஅரசர் ஒருவருக்கு உச்சநீதிமன்றம் சிறை தண்டனை விதிப்பது இதுதான் முதல் முறையாகும்.

     கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை நடத்த உத்தரவிட்டதும், அதை எதிர்த்து கர்ணன் சில உச்சநீதிமன்ற நீதிஅரசர்கள் பற்றி கூறிய கருத்துக்களும் நீதித்துறை வரலாற்றில் அழிக்க முடியாத எழுத்துக்களாக பதிவாகியுள்ளன.

     இதில் பல்வேறு அம்சங்கள் மக்களால் விவாதிக்கப்படுகின்றன. கர்ணன், தலித் என்பதால்தான் தன்மீது வன்கொடுமை கட்டவிழ்த்துவிடப்படுவதாக அவராகவே பிரகடனப்படுத்துவதை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

     உச்சநீதிமன்றம் என்பது மாநில அரசுகளையே ஆட்டம் காண வைக்கும் அதிகாரம் கொண்டது என்ற எண்ணம் மக்கள் நெஞ்சங்களில் ஆழப் பதிந்துள்ளது.

     சாமானியர்களை போல நீதிஅரசர்கள் மோதிக்கொள்வது அரசியலமைப்பின் மிக உயர்ந்த இடத்திலுள்ள நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்திவிடும் என்ற அச்சம் எழுகிறது.

     உயர்நீதிமன்ற நீதிஅரசர், உச்ச நீதிமன்ற நீதிஅரசர்கள் இடையிலான இந்தக் கருத்து வேறுபாடு-

நீதித் துறை வெள்ளையர்களால் உருவாக்கப் பட்ட சட்ட நிருவாகம் என்பதால் தானோ என்று எண்ணத் தோன்றுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.