Show all

சரிதா நாயர் மீதான காற்றாலை மோசடி வழக்கு பிப்ரவரி 17-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

சூரிய மின்தகடு முறைகேடு விவகாரம் தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை இரண்டு நாள்களில் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன் என்று சரிதா நாயர் தெரிவித்தார்.

 

கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரிதா நாயர் மீதான காற்றாலை மோசடி வழக்கு நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு விசாரணைக்கு ஆஜராக கோவைக்கு புதன்கிழமை வந்த சரிதா நாயர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

 

சூரிய மின்தகடு முறைகேடு விவகாரத்தில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி தரப்புக்கு ஆதரவாக இதுவரை உண்மையை மறைத்து பேசி வந்தேன். ஆனால், நான் லஞ்சமாக கொடுத்த தொகையை கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் திருப்பிக் கொடுக்கவில்லை.

 

மேலும், நாங்கள் கேட்ட உதவிகளையும் அவர்கள் செய்து தரவில்லை. இதன் காரணமாகவே உண்மையை வெளியில் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

 

இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் தம்மானு ரவி, தற்போதைய காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர் பென்னி பெகனல் ஆகியோர் இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கான ஆடியோ ஆதாரங்களை சூரிய மின்தகடு விசாரணை கமிஷன் முன்பாக ஏற்கெனவே சமர்ப்பித்துள்ளேன். இந்த விவகாரத்தில் என் மீது குற்ற வழக்குகள் சில நிலுவையில் உள்ளன. எனக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பைப் பொருத்துதான் என்னால் முழுமையான ஆதாரங்களை வெளியிட முடியும். எனினும், சிடி, பென்டிரைவ் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்களை விசாரணை கமிஷன் முன்பாக இரண்டு நாள்களுக்குள் சமர்ப்பிக்க உள்ளேன். அதில், புதிய நபர்களின் பெயர்களும் இடம் பெறும்.

 

கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கும், எனக்கும் தொடர்பு இருப்பதாகவும், அதற்கான விடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும் சிலர் கூறிவருவது முற்றிலும் பொய்யான தகவலாகும். இவ்விவகாரத்தில், மதுபான உரிமையாளர்களோ அல்லது மற்ற அரசியல் கட்சியினரோ என்னை இயக்கவில்லை என்றார்.

 

     சரிதா நாயர் மீதான காற்றாலை மோசடி வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

 

சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன், ஆர்.சி.ரவி ஆகியோர் காற்றாலை அமைத்துத் தருவதாக கோவையில் பல்வேறு நபர்களிடம் சுமார் ரூ.26 லட்சம் மோசடி செய்ததாக கடந்த 2009-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணைக்காக கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரிதா நாயர் புதன்கிழமை ஆஜரானார்.

 

சரிதா நாயர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, கோவை மாவட்ட குற்றப் பிரிவு காவல்துறைக்கு அவர் கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. அந்தக் கடிதம் அவர் எழுதியதா என்பதை அறிய அவரது கையெழுத்து, கையொப்பம் ஆகியவற்றைப் பெற காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை மறுத்து சரிதா நாயர் சார்பில் எதிர் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அதுபோல் கடிதம் ஏதும் எழுதவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராஜவேல், விசாரணையை வரும் பிப்ரவரி 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். மேலும், அன்றைய தினம், இவ்வழக்கில் தொடர்புடைய பிஜு ராதாகிருஷ்ணனை ஆஜர்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.