Show all

பொதுமக்களுக்கு துரிதமாக 3 நாட்களில் பாஸ்போர்ட் வழங்கும் புதிய திட்டம்

 

பொதுமக்களுக்கு துரிதமாக 3 நாட்களில் பாஸ்போர்ட் வழங்கும் புதிய திட்டம்

 

     பொதுமக்களுக்கு துரிதமாக ரூ.1,500 கட்டணத்தில் 3 நாட்களில் பாஸ்போர்ட் வழங்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

     சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் கே.பாலமுருகன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

 

     பொதுமக்கள் எளிமையாக பாஸ்போர்ட் பெறுவதற்கான பல நடவடிக்கைகளை நடுவண் அரசு எடுத்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த ஆண்டில் 1 கோடியே 20 லட்சம் பேர் பாஸ்போர்ட் பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 10 லட்சத்து 800 பேர் பாஸ்போர்ட் பெற்றுள்ளனர்.

 

இதன் மூலம் இந்தியா உலக அளவில் பாஸ்போர்ட் வழங்குவதில் 3-வது இடத்தில் உள்ளது. இதுபோல் பாஸ்போர்ட் பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, நடுவண் அரசு இ-சேவை உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் எடுத்து வருகிறது.

 

இந்த முறையில் விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணலுக்கான நாள் உடனே குறிக்கப்படுகிறது. அவர்களுக்கு 21 நாட்களுக்குள், பிறப்பு சான்றிதழ், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. குறிப்பாக 1989-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு ரூ.1,500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

 

     அதேபோல் ஏற்கனவே நடைமுறையில் உள்ள தட்கல் முறையில் அதாவது 3 நாட்களில் பாஸ்போர்ட் பெறும் நடைமுறையும் வழக்கத்தில் செயல்படுத்தப்படுகிறது. இந்த முறையில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 16 சான்றிதழ்களில் இடம் பெற்றுள்ள கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் கொண்டு பாஸ்போர்ட் பெறலாம். ஆனால் இந்த முறையில் பாஸ்போர்ட் பெற கூடுதலாக ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும்.

 

இதனைக் கருத்தில் கொண்டு ஒரு புதிய முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதாவது 3 நாட்களில், அதுவும் கூடுதல் கட்டணம் ரூ.2 ஆயிரம் இல்லாமல் பாஸ்போர்ட் பெற புது வழி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு கொண்டு 3 நாட்களில் பாஸ்போர்ட் வழங்கப்படும்.

 

பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கான அடிப்படை கட்டணம் ரூ.1,500 மட்டும் வசூலிக்கப்படுகிறது. பொதுவாக பாஸ்போர்ட் பெறும் விண்ணப்பதாரர் மீது கிரிமினல் வழக்கு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விண்ணப்பதாரரின் வீட்டிற்கு சென்று விசாரிப்பது வழக்கம். ஆனால் இந்த முறையை துரிதப்படுத்தும் வகையில் போலீசார் கையில் விரைவில் ‘டேப்’ கொடுக்கப்படும். அவர் அந்த ‘டேப்’ கொண்டு ஆன்லைன் மூலம் உடனுக்குடன் விண்ணப்பதாரர் ஆவணங்களை சரிபார்த்து பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அனுப்புவார்.

 

இதன் மூலம் உடனே பாஸ்போர்ட் பெற நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் திட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. பாஸ்போர்ட் பெற விரும்பும் விண்ணப்பதாரரை நேர்காணல் செய்ய ஒரு குறிப்பிட்ட நாள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. புதிய முறையின் படி 5 வேலை நாட்கள் வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் தாங்கள் விரும்பும் நாளில் நேர்காணலுக்கு சென்று தகவல்களை அளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தகவல் தொடர்பு துணை-இயக்குனர் ஜாகோப் மற்றும் சென்னை மண்டல துணை பாஸ்போர்ட் அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.