Show all

சாகித்ய அகாதெமி செயற்குழுக் கூட்டத்தில் கல்புர்கி படுகொலைக்கு கண்டனத் தீர்மானம்.

கன்னட எழுத்தாளர் எம்.எம். கல்புர்கி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தில்லியில்  நடைபெற்ற சாகித்ய அகாதெமி செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், இச்சம்பவம் மீது கருத்து வெளியிடவில்லை என அதிருப்தியை வெளியிட்டு சாகித்ய அகாதெமி விருதுகளைத் திருப்பி அளித்த எழுத்தாளர்கள் அவற்றை மீண்டும் பெற்றுக் கொள்ளுமாறும் சாகித்ய அகாதெமி செயற்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

கன்னட எழுத்தாளர் எம்.எம். கல்புர்கி, சிந்தனையாளர்கள் பன்சாரே, தபோல்கர் ஆகியோரின் படுகொலைகள், தாத்ரி சம்பவம் ஆகியவை தொடர்பாக சாகித்ய அகாதெமி எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை எனக் கூறி 30-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாதெமி விருதுகளைத் திருப்பி அளித்தனர்.

சிலர் சாகித்ய அகாதெமியின் உறுப்பினர்கள் பதவிகளையும் ராஜிநாமா செய்வதாக அறிவித்தனர். அவர்களைச் சமாதனப்படுத்த சாகித்ய அகாதெமி நிர்வாகிகள் மேற்கொண்ட முயற்சிகள் பலன் கொடுக்கவில்லை.

இந்நிலையில், சாகித்ய அகாதெமியின் அவசர செயற்குழு கூட்டம் அதன் தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரி தலைமையில் தில்லியில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற சாகித்ய அகாதெமியின் தமிழ் பிரிவுக்கான அமைப்பாளர் கிருஷ்ணசாமி நாச்சிமுத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சாகித்ய அகாதெமியின் செயற்குழுவில், கன்னட எழுத்தாளர் கல்புர்கி உள்ளிட்ட சில எழுத்தாளர்கள் கொலை சம்பவங்களுக்கு இரங்கல் தீர்மானமும் படுகொலைகளை வன்மையாகக் கண்டிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

சாகித்ய அகாதெமியின் பரிசுளைத் திருப்பிக் கொடுத்த எழுத்தாளர்கள் அவற்றைத் திரும்பப் பெறவும், சாகித்ய அகாதெமியில் இருந்து பதவி விலகியும், பதவி விலகல் கடிதம் கொடுத்த எழுத்தாளர்கள், உறுப்பினர்கள் மீண்டும் பணிகளைத் தொடரும்படியும் வலியுறுத்தியும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கருத்து சுதந்திரத்திற்கு எதிரான கொலைகளைக் கண்டிக்கும் அதே சமயம், இதுபோன்ற  சம்பவங்களைத் தடுக்க நடுவண், மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் செயற்குழு கேட்டுக் கொண்டது.

எழுத்தாளர்கள் படுகொலை தொடர்பாக சாகித்ய அகாதெமி தனது கடமையைச் செய்யவில்லை என்ற கருத்து உள்ளது. ஆனால், சம்பவம் நடந்த உடனேயே பெங்களூரூ, காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரங்கல் கூட்டமும், கண்டனத் தீர்மானமும் சாகித்ய அகாதெமி சார்பில் நிறைவேற்றப்பட்டது, என்றார்.

எழுத்தாளர்களில் இரு பிரிவினர் தனித்தனியாக ஊர்வலம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, சாகித்ய அகாதெமி வளாகத்திலும் வெளியேயும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.