Show all

காஷ்மீர் மாநிலத்திற்கும், சிறப்புத் தகுதிக்கும் தலைவலி பாகிஸ்தானே! அதன் பொருட்டே வீணாய்ப் போனது ஓர் உயரிய சிறப்புத்தகுதி.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புத் தகுதியை இரத்து செய்தும், அந்த மாநிலத்தை இரு ஒன்றியப் பகுதிகளாகப் பிரித்தும் பாஜக நடுவண் அரசு அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டது. இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான், மட்டுமே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

32,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புத் தகுதியை இரத்து செய்தும், அந்த மாநிலத்தை இரு ஒன்றியப் பகுதிகளாகப் பிரித்தும் பாஜக நடுவண் அரசு அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டது. 

ஓர் உயரிய சிறப்புத்தகுதியை இழந்தது காஷ்மீர்; அதற்காக கவலைப் படவேண்டியதும், போராட வேண்டியதும் காஷ்மீரே. ஆனால், இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான், மிகுந்த கவலைப் படுகிறது; கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உண்மையில் இந்த நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தான், அக்கறை காட்ட வேண்டிய தேவை என்ன இருக்க முடியும்? 

இந்திய- பாகிஸ்தான் விடுதலையின் போது, காஷ்மீரும் தனிநாடாக விடுதலை பெற்றது. பாதுகாப்பின் அடிப்படையில் தனித்தியங்க முடியாமல், இந்தியாவோடோ- பாகிஸ்தானோடோ காஷ்மீரை இணைக்கும் வாய்ப்பு இருந்தது. காஷ்மீர் நாட்டின் மாமன்னர் ஹரிசிங், காஷ்மீரைக் கைப்பற்ற கடும்போக்கை கொண்டிருந்த பாகிஸ்தானைப் புறந்தள்ளி விட்டு, மென்மைப் போக்கையும் நிபந்தனைகளுக்குத் தலை வணங்கிய பாங்கின் அடிப்படையில் காஷ்மீரை இந்தியாவோடு இணைத்தார். 

தனது காஷ்மீர் நாட்டிற்கு 370 மற்றும் 35அ சிறப்புத் தகுதியை நிர்பந்தித்துப் பெற்றுக் கொடுத்தார். ஆனால் அந்தச் சிறப்புத் தகுதியைக் கொண்டாட, தமிழகம் போன்று: உலகின் மூத்த மொழி தமிழ், தமிழ்ப்பண்பாடு, செழுமையான இலக்கியங்கள், தொன்மை, நெடிய வரலாறு, கல்லணை, பெரிய கோயில் போன்ற வரலாற்று அடையாளங்கள், அரிக்காமேடு, கீழடி, இப்படி ஏராளமான மீட்க வேண்டிய தொன்மைச் சான்றுகள் என்பனவாக தனிச் சிறப்பு அடையாளம் கொண்ட மண்ணாக காஷ்மீர் இல்லை. மூன்று மதங்கள், பல மொழிகள்,  லடாக், ஜம்முகாஷ்மீர்  இருவேறு பகுதிகள் என பன்முகத் தன்மை.

சரி போகட்டும். மாமன்னர் ஹரிசிங் பெற்றுத் தந்த ஓர் உயரிய தகுதியை நாய் பெற்ற தெங்கம் பழம் என்பது போல பயன் படுத்திக் கொள்ளத் தெரியவில்லை. சிறப்புத் தகுதியையும், சிறப்புத் தகுதி பெற்றுத்தந்த மாமன்னரையுமே அடையாளம் ஆக்கிக் கொண்டு ஒருங்கிணைந்திருக்கலாம் காஷ்மீர். அதையும் செய்யவில்லை. 

இங்கே தான் பாகிஸ்தான் வேட்டைநாயாக காஷ்மீர் மாநிலத்திற்காக காத்திருக்கத் தொடங்கியது. காஷ்மீர் மாநிலத்திற்கு கிடைத்த 370 மற்றும் 35அ சிறப்புத் தகுதியை தனக்கு சாதகமான அம்சமாக கருதிக் கொண்டு ஆட்டை காவல் காக்கிற ஓநாய் போல, இலவுகாத்த கிளியாக 73 ஆண்டுகளாய் காஷ்மீரை தமதாக்கிக் கொள்ள முடியும் என்று காத்திருந்தது. காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதி என்று விட்டு விட்டு தமது நாட்டின் முன்னேற்றத்திற்காய் இந்த 73 ஆண்டுகளை செலவிட்டிருந்திருக்கலாம் பாகிஸ்தான். 

காஷ்மீரின் அறிவு சார்ந்த மக்கள், ஓர் உயரிய சிறப்புத் தகுதி பறிபோனதே என்று கவலைப் படுகின்றனர். முழுக்க முழுக்க பாகிஸ்தான் சார்பை விரும்பாத பொதுவான மக்கள், என்ன பெரிய சிறப்புத்தகுதி? வேட்டை நாய் போல எந்த நேரமும் ஆயுதங்களோடு காத்திருக்கிற பாகிஸ்தானின் தலைவலி ஓய்ந்தால் சரிதான் என்கின்றனர். இதுதான் பாஜகவிற்கான ஆதரவு அம்சம். 

பொதுவாகவே தகுதியிழப்பு என்பது பின்னடைவுதான் என்று, தமிழகம் மட்டுமே நேர்மையாக, கருத்தைப் பதிவு செய்கிறது.  பாகிஸ்தானை அப்புறப் படுத்துவதற்கு வேறு வகையான முயற்சியை செய்திருக்கலாம். எலிக்கு பயந்து கொண்டு கூரையை கொளுத்துகிற முயற்சிதான் இது. 

மேலும்: வரலாற்றுக் காரணம், மொழி அடிப்படையைக் காரணம் காட்டி பங்களா தேசத்தை தனி நாடாக்கிக் கொடுக்க இந்தியாவிற்கு காரணம் இருக்கிற போது, மொழி அடிப்படை, மத அடிப்படையாக ஒத்துப் போகிற காஷ்மீர் மீதான உரிமை, காஷ்மீரில் உலாவும் பாகிஸ்தானிய ஆதரவு சக்திகள் என்று உலகத் தளத்தில் தொடர்ந்து முறையிட்டுக் கொண்டேதான் இருக்கப் போகிறார்கள் பாகிஸ்தானியர்கள் என்று இந்த பாஜக நடுவண் அரசின் 370 மற்றும் 35அ சிறப்புத் தகுதியை நீக்கிய முயற்சியைக் கண்டிக்கிறது தமிழகம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,247.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.