Show all

ராம்நாத் கோவிந்த் இந்தியாவின் 14வது குடியரசுத்தலைவராக தேர்வு

ராம்நாத் கோவிந்த் இந்தியாவின் 14வது குடியரசுத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் தேஹத் மாவட்டம் தேராபூரில், 1945ஆம் ஆண்டு அக்டோபர் முதல் நாள்; பிறந்தார். கான்பூர் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றவர்.

     டெல்லி உயர் அறங்கூற்று மன்றத்திலும் உச்ச அறங்கூற்று மன்றத்திலும் மொத்தம் 16 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினார்.

     ராம்நாத் கோவிந்த் 1974ஆம் ஆண்டு சவிதாவை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 1977ஆம் ஆண்டு ஜனதா நடுவண் அரசில் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாயின் தனிச் செயலாளராக பணியாற்றினார். இதுதான் அவரது அரசியல் பயணத்திற்கு வித்திட்டது.

     பாஜகவில் இணைந்த இவர், உத்தரபிரதேச மாநிலம் காதம்பூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த 1991ஆம் ஆண்டு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். எனினும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் அத்வானியுடன் நெருக்கமாக இருந்தார்.

     உத்தர பிரதேசத்திலிருந்து 1994ல் பாராளுமன்ற மேலவை  உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தொடர்ச்சியாக 2 முறை அதாவது 2006ஆம் ஆண்டு வரை ராம்நாத் கோவிந்த் பாராளுமன்ற மேலவை உறுப்பினராக பணியாற்றினார்.

     1998 முதல் 2002 வரை பாஜகவின் பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவின் தலைவராகப் பதவிவகித்தவர். அப்போது தலித் மற்றும் பழங்குடியினர் நலன், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் மற்றும் சட்டம் மற்றும் நீதித் துறை உள்ளிட்ட பல்வேறு நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் உறுப்பினராக பதவி வகித்தார்.    பாஜகவின் தலித் மற்றும் பழங்குடியினர் பிரிவின் தேசிய தலைவராகவும், கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் ராம்நாத் பதவி வகித்துள்ளார்.  

     கடந்த 2002ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில், இந்தியப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

     டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் (லக்னோ) நிர்வாகக் குழு உறுப்பினராகவும் கொல்கத்தா ஐஐஎம் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

     பாராளுமன்ற மேலவை உறுப்பினராகத் தாய்லாந்து, நேபாளம், பாகிஸ்தான், சிங்கப்பூர், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார்.

     பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு, 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பீகார் மாநில ஆளுநராக ராம்நாத் கோவிந்த் நியமிக்கப்பட்டார். ஆளும் பாஜக அரசின் குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் தன்னை எதிர்த்து போட்டியிட்ட எதிர்கட்சி வேட்பாளர் மீராகுமாரை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

     ராம்நாத் கோவிந்த்திற்கு இதுவே முதல் தேர்தல் வெற்றி என்ற போதும் குடியரசுத்தலைவர் என்கிற உயர்ந்த வெற்றிதான்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.