Show all

நம்ம குடியரசு தலைவரின் இயற்பெயர் 'புதி' என்பதாகத் தெரிவித்துள்ளார்!

நம்ம குடிஅரசு தலைவர், திரௌபதி என்பது தனக்கான உண்மை பெயர் இல்லை என்றும், அவரின் இயற்பெயர் புதி என்றும் தெரிவித்துள்ளார். 

09,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: குடிஅரசு தலைவர், ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில், ராய்ரங்கபூர் கிராமத்தில் பைடாசாபோசி பகுதியில் பிறந்தவர். ஒடிசா பழங்குடி மக்களில் சாந்தாலி இனத்தில் பிறந்தவர். 

நாட்டின் முதல் பழங்குடியின குடியரசு தலைவரும் இரண்டாவது பெண் குடியரசு தலைவரும் என்ற பெருமையை முர்மு பெற்றுள்ளார்.

குடியரசு தலைவர் முர்முவுக்கு நாற்பத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சியாம் சரண் என்பவரோடு திருமணம் நடந்தது. இருவருக்கும் மூன்று குழந்தைகள் பிறந்தனர். இரு மகன்கள் உயிரிழந்துவிட்டனர், கணவரும் காலமாகிவிட்டார். தற்போது, முர்முவுக்கு, இட்ஸ்ரீ முர்மு என்ற மகளும் உள்ளனர். அவர் வங்கியில் பணியாற்றி வருகிறார்

இந்திய ஒன்றியத்தின் பதினைந்தாவது குடியரசு தலைவராக புதிமுர்மு இன்று பதவி ஏற்றுக்கொண்டார். குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் தலைமைஅறங்கூற்றுவர் என்.வி.ரமணா, முர்முவுக்கு பதவி உறுதிமொழி ஏற்றிடச் செய்தார். 

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் ஒடிசாவைச் சேர்ந்த தனியார் காட்சிமடைக்கு புதிமுர்மு பேட்டியளித்தார். அப்போது தனது இயற்பெயர் குறித்த கமுக்கத்தை வெளியிட்டார். அவர் கூறுகையில் 'திரௌபதி முர்மு என்பது எனது இயற்பெயர் அல்ல. சாந்தாலி பிரிவில் என்னுடைய பெயர் புதி. ஆனால் திரௌபதி என்று என்னுடைய பள்ளி ஆசிரியர்தான் பெயர் வைத்தார்.

திரௌபதி என்னுடைய இயற்பெயர் அல்ல. என்னுடைய பள்ளி ஆசிரியர், அதாவது என்னுடைய மாவட்டத்தைச் சேராத வேறு ஒரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் வைத்த பெயர். 

இந்தியா விடுதலை பெற்று பதின்மூன்று ஆண்டுகளில் பழங்குடிகள் அதிகமாக இருக்கும் மயூர்பஞ்ச் மாவட்டதிலிருந்துதான் பாலாசூர் அல்லது கட்டாக்கிற்கு ஆசிரியர்கள் செல்ல முடியும். என்னுடைய இயற்பெயரை ஆசிரியர்கள் விரும்பவில்லை. வேறு பெயர் வைக்க வேண்டும் என்பதற்காக திரௌபதி என்று சூட்டினார்கள்

என்னுடைய பெயர் பலமுறை மாறியுள்ளது. துர்பதி, தோர்பதி என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால், சாந்தாலி கலாச்சாரத்தில் இயற்பெயர் அழியாது. 

பெண் குழந்தை பிறந்தால், தாய்வழிப்பாட்டி பெயர் வைப்பதும், ஆண் குழந்தை பிறந்தால், தந்தைவழிதாத்தா பெயர் வைப்பதும் மரபுவழியாக இருக்கிறது இவ்வாறு முர்மு தெரிவித்தார்.

புதிமுர்மு அவர்களின் தாய்மொழியான சாந்தலி மொழி, இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணைப்படி இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் ஒன்றாகும். இது ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களின் இரண்டாவது மாநில மொழியாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இம்மொழி பேசுபவர்களின் படிப்பறிவு மிகக் குறைவாக அதாவது பத்திலிருந்து முப்பது விழுக்காடாக உள்ளது. இது சுமார் 76 இலட்சம் மக்களால் பேசப்படுகிறது இந்திய விடுதலைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்புதான் சாந்தலி மொழிக்கு எழுத்து உருவாக்கப்பட்டது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,320.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.