Show all

இலங்கை அகதிகள் வெளியேற்றத்தை தடுக்கும்‘ஆபரேசன் சாத்ராக்’ ஒத்திகை

இலங்கை அகதிகள், படகு மூலம் ஆஸ்திரேலியா செல்வதை தடுக்கும் வகையில் தூத்துக்குடியில்,

‘ஆபரேசன் சாத்ராக்’ என்னும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது.

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் தங்கி இருப்பவர்கள் அவ்வப்போது, முகாமை விட்டு வெளியேறி படகு மூலம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு செல்கின்றனர். இதனைத் தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும் இலங்கை அகதிகள் தொடர்ந்து படகு மூலம் செல்லும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

இதைத் தொடர்ந்து இலங்கை அகதிகள் கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு  செல்வதை தடுக்கும் வகையில், தூத்துக்குடி கடலோர காவல்படை சார்பில்,

‘ஆபரேசன் சாத்ராக்’ என்னும் பாதுகாப்பு ஒத்திகையை நேற்று நடத்தினர். தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்ட கடற்கரை பகுதிகளிலும் நேற்று காலை 7 மணிக்கு இந்த ஒத்திகை நிகழ்ச்சி தொடங்கியது.

இதில் தூத்துக்குடி கடலோரகாவல்படை, கடலோர பாதுகாப்பு காவல்துறை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கலந்து கொண்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

 

அதன்படி தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு துணை காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்டான்லி ஜோன்ஸ் தலைமையில், தருவைகுளம் கடலோர பாதுகாப்பு காவல்துறை ஆய்வாளர் முகேஷ் ஜெயக்குமார், துணை காவல்துறை ஆய்வாளர்; பொன்ராஜ், கோபி, வசந்தகுமார் ஆகியோர் 12 டன் எடை கொண்ட ஒரு ரோந்து படகு, 5 டன் எடை கொண்ட 2 ரோந்து படகுகளில் கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதே போன்று கடலோர காவல்படை ரோந்து கப்பல்களும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

அப்போது, கடற்கரையோரம் அமைந்து உள்ள துறைமுகம், ஜிர்கோனியம் வளாகம், கூடங்குளம் அணுமின்நிலையம் உள்ளிட்ட பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் கண்காணிப்பை பலப்படுத்தினர். தூத்துக்குடி கடல் பகுதியில் அமைந்து உள்ள தீவுகளில் ஏதேனும் மக்கள் நடமாட்டம் உள்ளதா என்பது குறித்தும், ஒவ்வொரு தீவுகளாக சென்று ஆய்வு செய்தனர்.

மீன்பிடி படகுகளில் முறையான ஆவணங்கள் வைத்து உள்ளார்களா என்பது குறித்தும் சோதனை செய்தனர். சந்தேகப்படும்படியான நபர்கள் யாராவது தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும், வெளிநாடுகளுக்கு யாரையும் படகுகளில் ஏற்றிச் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தினர். இந்த ஒத்திகை நிகழ்ச்சி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

பொது மக்கள், மீனவர்கள் பாதுகாப்புக்கும் இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டால் என்ன என்று பேசிக்கொண்டார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.