Show all

போலியோ சொட்டு மருந்தில் வைரஸ்! பயோமேட் நிறுவனம் மூடல்; வினியோகிக்கப்பட்ட சொட்டுமருந்துகளைத் திரும்பப் பெற்றது நடுவண் அரசு

19,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அரசின் தீவிர தொடர் நடவடிக்கைகளால், கடந்த ஏழு ஆண்டுகளில் போலியோ அற்ற நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையே.

இந்நிலையில், தெலுங்கானா, மகாராஷ்டிரா,உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட போலியோ மருந்தில், வைரஸ் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்தில் இயங்கிவரும் பயோமேட் என்ற பெயரிலான, போலியோ சொட்டுமருந்து நிறுவனத்தை மூடி, சுகாதாரத்துறை அமைச்சகம் முத்திரை வைத்துள்ளது. மேலும் அதன் உரிமையாளரும் கைதுசெய்யப்பட்டார்.

3 மாநிலங்களிலும் வழங்கப்பட்ட போலியோ சொட்டு மருந்தை உட்கொண்ட குழந்தைகளின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக விரிவான, விசாரணை நடைபெற்றுவருகிறது. இம்மூன்று மாநிலங்களிலும், 1.5 லட்சம் மருந்துகள் வினியோகிக்கப்பட்டு அதில் 3ல் இரண்டு பங்கு மருந்து குழந்தைகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து மருந்து மீது புகார் வந்ததால் எஞ்சிய மூன்றில் ஒரு மடங்கு மருந்துகளையும் அரசு திரும்பப் பெற்றுள்ளது.

இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானதும், சமூக வலைத்தளங்களில், போலியோ சொட்டு மருந்துகளை இனிமேல் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்ற பீதியூட்டும், கருத்துப் பரப்புதல்கள் தொடங்கி விட்டன. இதுகுறித்து நடுவண் அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, மூடப்பட்ட பயோமேட் நிறுவனத்தால் வினியோகிக்கப்பட்ட சொட்டுமருந்துகள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டுவிட்டதாகவும் எனவே யாரும் பீதியடைய தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலியோ சொட்டு மருந்து உட்கொள்ள கூடாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலில் உண்மை இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

குழந்தைகளுக்கு வழக்கம்போல போலியோ சொட்டு மருந்துகளை வழங்கி, இளம் பிள்ளை வாதத்திற்கு எதிராக கைகோர்க்குமாறு, நடுவண் சுகாதாரத்துறை அமைச்சகம் மக்களுக்கு கோரிக்கைவிடுத்துள்ளது. 'வருங்காலங்களில் போலியோ தடுப்பு மருந்தை பயன்படுத்த வேண்டாம் என்ற வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம்' என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மக்களின் அச்சம் நீங்கி, வருங்காலங்களில் மீண்டும் போலியோ செட்டு மருந்தின் மீது நம்பிக்கை பிறப்பதற்கு, அரசு கருத்துப் பரப்புதலில் மேலும் கூடுதல் முயற்சியும், மருந்து தயாரிப்பு பேணுதல் வழங்கலில் மேலதிக கவனமும் செலுத்தியாக வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,931.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.