Show all

பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சைய், இந்தியா வரும்பட்சத்தில் அவரை வரவேற்போம்: சிவசேனா.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சைய், இந்தியா வரும்பட்சத்தில் அவரை வரவேற்போம் என்று சிவசேனா கட்சி கூறியுள்ளது.

பாகிஸ்தான் பாடகர் குலாம் அலி மும்பையில் நடத்த இருந்த இசை நிகழ்ச்சி, பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் கசூரி எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு, சிவசேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதன்காரணமாக, குலாம் அலியின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. கசூரியின் புத்தக வெளியீட்டு விழா கடும் பாதுகாப்பிற்கிடையே நடைபெற்றது. இதனிடையே அந்நாட்டு இசைக்கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் இந்தியா வர அனுமதிக்க மாட்டோம் என்பதில் சிவசேனா கட்சி, உறுதியாக உள்ளது.

இதுதொடர்பாக, சிவசேனா கட்சி செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ரவுட் கூறியதாவது, பாகிஸ்தான் இசைக்கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் இந்தியா வர அனுமதிக்க மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளோம். பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி வரும் பாகிஸ்தான் சிறுமி மலாலா, இந்தியா வந்தால் அவரை வரவேற்போம். ஏனெனில், மலாலா, பாகிஸ்தானில் இருந்தவாறே, பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி வருகிறார். பயங்கரவாதத்திற்கு தாங்கள் எதிரானவர்கள் என்பதை மலாலாவிற்கு நாங்கள் கொடுக்க இருக்கும் வரவேற்பின் மூலம், பாகிஸ்தான் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும் என்று சஞ்சய் ரவுட் கூறியுள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.