Show all

சொந்த மாநில நலனில் அக்கரை காட்டும் வடமாநில பாஜகவினர்! தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புகழாரம்

டெல்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஒன்றிய வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கூட்டத்தில், மாநிலத்தின் நிதி ஆதாரத்தை திருப்பி நிலைநாட்ட வேண்டும் எனவும், வாஜ்பாய் ஆட்சியில் இருந்த நிலையை உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இது மகிழ்ச்சியாகவும், வியப்பாகவும் இருக்கிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களை சேர்ந்த அமைச்சர்கள் இந்தக் கோரிக்கையை முன்னெடுத்திருந்தனர் என்று பாராட்டியுள்ளார் பழனிவேல் தியாகராஜன்

10,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: டெல்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஒன்றிய வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கூட்டம் நடந்தது. இதில் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் உள்பட கட்சி பாகுபாடு இன்றி தென்இந்தியா, வடஇந்தியா என்ற வேறுபாடு இன்றி அனைத்து மாநிலங்களும், மாநிலத்துக்கான நிதி உரிமைகள் குறைந்து கொண்டே வருகிறது. இதை சீர்த்திருத்தம் வேண்டும் என குரல் கொடுத்தது மகிழ்ச்சியாகவும், வியப்பாகவும் இருந்தது என தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பாஜகவினரும் சொந்த மாநில நலனில் அக்கரை கொண்டுள்ளதைப் பாராட்டியுள்ளார்.

ஒவ்வொரு ஒன்றிய வரவுசெலவுத்திட்ட பதிகைக்கு முன்பாக ஒன்றிய நிதி அமைச்சர் மாநில நிதி அமைச்சர்களுடனும், பல்வேறு தொழில்துறையினருடன் ஆலோசனை நடத்துவது வழக்கமான ஒன்றாகும். 

அந்த வகையில் எதிர்வரும் ஆண்டுக்கான ஒன்றிய வரவுசெலவுத் திட்டம் இரண்டு மாதங்களில் பதிகை செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 

இதனால் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்றிய வரவுசெலவுத்திட்டத்திற்கு முந்தைய ஆலோசனை கூட்டத்தை தொடங்கி உள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் கடந்த திங்கட் கிழமை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் தொழில் துறையினர், தொழில் கூட்டமைப்பினர் உள்பட பல்வேறு துறை பேராளர்கள் பங்கேற்று வருகின்றனர். 

நேற்று டெல்லியில் நடந்த ஆலோசனையில் ஒவ்வொரு மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்தகூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு நிதி அமைச்சரும் தங்கள் மாநிலத்துக்கான கோரிக்கைகளை முன்வைத்தனர். 

இந்த கூட்டத்துக்குப் பிறகு தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கட்சி பாகுபாடு இன்றி இந்தக் கூட்டத்தில் கட்சிக்கு அப்பாற்பட்டு தென்இந்தியா, வடஇந்தியா என்ற வேறுபாடு இன்றி அனைத்து மாநிலங்களும், மாநிலத்துக்கான நிதி உரிமைகள் குறைந்து கொண்டே வருகிறது என தெரிவித்தனர். இதை சீர்த்திருத்த வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்த திட்டம், மத்திய-மாநில அரசின் நிதி பங்கீட்டு புள்ளிவிபரங்களை சுட்டிக்காட்டி ஆதாரங்களுடன் கோரிக்கைகள் வைக்கப்பட்டது. 

மேலும் மாநிலத்தின் நிதி ஆதாரத்தை திருப்பி நிலைநாட்ட வேண்டும் எனவும், வாஜ்பாய் ஆட்சியில் இருந்த நிலையை உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இது மகிழ்ச்சியாகவும், வியப்பாகவும் இருக்கிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களை சேர்ந்த அமைச்சர்கள் இந்தக் கோரிக்கையை முன்னெடுத்திருந்தனர். 

மேலும் உலகளவில் பெரிய பொருளாதார நெருக்கடி வரக்கூடிய வாய்ப்பு உள்ள நிலையில் மாநிலத்தில் கடன் எல்லைகளையும், சரக்குசேவைவரி நிவாரணம் வழங்கும் காலத்தையும் 2 ஆண்டு நீட்டிப்பு செய்ய வேண்டும். 15வது நிதிக்குழுவின்படி பற்றாக்குறையை அடுத்த ஆண்டுக்குள் 3 விழுக்காட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என கூறப்பட்டது என்றார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,444.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.