Show all

கருநாடகத் தேர்தல் தடையில்லை! நடுவண் அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட: தேர்தல்ஆணையர்

13,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நாள் இன்று அறிவிக்கப்படுவதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், அதற்கு தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் பதில் அளித்தார். கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நாளை இன்று காலை 11 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டது. எனவே, அடுத்த நொடியில் இருந்து, கர்நாடக அரசால் எந்த ஒரு நலத்திட்டங்களையும் அறிவிக்க முடியாது. மக்கள் நல திட்டங்கள் பேரிடர் மீட்பு போன்ற நடவடிக்கைகளை தவிர வேறு எந்த வகை நடவடிக்கைகள் மூலமும் மக்களை ஈர்க்க அரசுகள் முயற்சி செய்யக் கூடாது. கர்நாடகாவில் நடுவண் அரசும் எந்த நலப் பணிகளையும் மேற்கொள்ள முடியாது. 

எனவே நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதை காரணமாக்கி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதிலிருந்து விடுபட மோடி அரசு முயற்சிக்க முடியுமா என்பதில் சந்தேகம் எழுந்தது. 

காவிரி மேலாண்மை வாரியம் உச்சஅறங்கூற்றுமன்ற உத்தரவுப்படி வரும் வியாழனுக்குள் நடுவண் அரசு அமைத்தாக வேண்டும். ஆனால், கடைசி நேரத்தில் தேர்தல் அறிவிப்பை காரணமாக கூறி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்திய அரசு தவிர்த்துவிடுமோ என்ற அச்சம் தமிழக உழவர்களிடம் ஏற்பட்டிருந்தது.

தேர்தல் நடத்தை விதிமுறை அமல் இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, தேர்தல் நடத்தை விதிமுறைகள் தடையாக இருக்குமா என்ற கேள்வியை நிருபர்கள், ஓம்பிரகாஷ் ராவத்திடம் எழுப்பினர். அதற்கு அவர், உச்சஅறங்கூற்றுமன்ற உத்தரவின்பேரில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு தேர்தல் ஆணைய நடத்தை விதிமுறைகள் தடையாக இருக்காது என்று தெளிவாக தெரிவித்துவிட்டார். 

எனவே தேர்தலை வைத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தள்ளிப்போட நடுவண் அரசால் முடியாது. வேறு காரணத்தை சொல்லி வேண்டுமானால் தள்ளிப்போட முயலலாம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,739.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.