Show all

பத்து நாட்கள் தொடர்ந்து நடைபயணம் கருத்துப்பரப்புதல்! நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து வைகோ

13,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டிபுரம் மலை பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையத்தை செயல்படுத்த நடுவண் அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகமும் அனுமதி வழங்கி உள்ள நிலையில் இந்தத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக்கூடாது. இதனால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படும் என பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொதுமக்களிடையே ஆதரவு திரட்டவும் மதுரை-தேனி மாவட்டங்களில் நடைபயணம் மேற்கொள்கிறார்.

வருகிற சனிக்கிழமை காலை 9 மணிக்கு மதுரை பழங்காநத்தம் சந்திப்பில் நடைபயண தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். வைகோவின் நடைபயணத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து வைகோவுடன் ஆயிரக்கணக்கானோர் நடைபயணத்தில் பங்கேற்கிறார்கள்.

மதுரை பழங்காநத்தத்தில் இருந்து தொடங்கும் நடைபயணம் மதுரை பை-பாஸ் ரோடு, காளவசல் சந்திப்பு, தேனி முதன்மைச்சாலை, விரட்டி பத்து, அச்சம்பத்து, நாகமலைபுதுக்கோட்டை, செக்கானூரணி சென்றடைகிறது. அன்று இரவு பொதுக்கூட்டம் நடக்கிறது.

மறுநாள் ஞாயிறு கருமாத்தூர், செல்லம்பட்டி, வாலாந்தூர் வழியாக வைகோவின் நடை பயணம் உசிலம்பட்டி சென்றடைகிறது. அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வைகோ பேசுகிறார்.

திங்கட்கிழமை தொட்டப்பநாயக்கனூர், செட்டியபட்டி வழியாக நடைபயணம் ஆண்டிப்பட்டி சென்றடைகிறது. அங்கு இரவு பொதுக்கூட்டம் நடக்கிறது.

செவ்வாய்க்கிழமை ஜக்கம்பட்டி வழியாக வைகோவின் நடை பயணம் தேனி சென்றடைகிறது. தேனி பேருந்து நிலையத்தில் இரவு பொதுக்கூட்டத்தில் வைகோ பேசுகிறார்.

புதன்கிழமை பழனிசெட்டிபட்டி, சடையல்பட்டி, பத்திரகாளி புரம் வழியாக நடைபயணம் போடிநாயக்கனூர் சென்றடைகிறது. அங்கு இரவு பொதுக்கூட்டத்தில் வைகோ பேசுகிறார்.

வியாழக்கிழமை தேவாரம், தர்மத்துப்பட்டி, சிலைமலை, பொட்டிபுரம் வழியாக வைகோ டி.புதுக்கோட்டை செல்கிறார்.

வெள்ளிக்கிழமை சொக்கநாதபுரம், தேவாரம், பண்ணைப்புரம் வழியாக மேலசிந்தலைச்சேரி சென்றடையும் வைகோ அங்கு இரவு தங்குகிறார்.

சனிக்கிழமை மேலசிந்தலைச்சேரி, புலிகுத்தி, அம்மாபட்டி, உத்தமபாளையம், கோகிலாபுரம் வழியாக ராயப்பன்பட்டிக்கு வைகோவின் நடைபயணம் சென்றடைகிறது.

ஞாயிற்றுக்கிழமை அணைப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, கீழக்கூடலூர் வழியாக கூடலூர் செல்லும் வைகோ அங்கு இரவு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

திங்கட்கிழமை கம்பம் நகரில் முதன்மை வீதிகளில் வைகோ நடைபயணம் மேற்கொள்கிறார். அங்கு பொதுக் கூட்டத்திலும் பேசுகிறார். இதைத்தொடர்ந்து 10 நாள் நடைபயணம் நிறைவு பெறுகிறது.

இந்த நடைபயணத்தின் போது போடி பகுதியில் நியூட்ரினோ திட்டம் கொண்டு வரப்பட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து துண்டு பிரசுரங்கள், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் பொதுமக்களிடம் விநியோகிக்க வைகோ திட்டமிட்டுள்ளார்.

ஒவ்வொரு பகுதிகளிலும் நடைபயணம் செல்லும் போது அந்த பகுதியில் உள்ள உழவர்கள் மற்றும் பொதுமக்களையும் நடை பயணத்தில் பங்குப்பெற செய்து நியூட்ரினோ திட்ட எதிர்ப்புக்கு பெரும் வலுசேர்க்க வைகோ திட்டமிட்டுள்ளார். வெல்க வைகோ என வாழ்த்துவோம். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,739

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.