Show all

'ஹிந்தித்திணிப்பு' எதிர்ப்புத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்! வரும் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் முன்னெடுக்கிறது திமுக

இந்தியாவில் ஆங்கிலத்தை முற்றாக அகற்றிவிட்டு, அந்த இடத்தில் ஹிந்தியை நிறுவி, தமிழ் உள்ளிட்ட இந்தியத் தொன்மொழிகளை பூண்டற்றுப் போக்கிடும் வகைக்கான சாம பேத தான தண்ட முயற்சிகளை எடுத்து வருகின்றனர் வடஇந்தியத் தலைவர்கள், நேற்று காங்கிரசிலும் இன்று பாஜகவிலும், கடந்த எழுபத்தி ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து.  அன்றிலிருந்து இன்றுவரை திமுகவும் தமிழ்நாட்டுக் கட்சிகளும் இந்தியத் தொன்மொழிகளை ஹிந்தித்திணிப்பிலிருந்து காத்து நிற்கும் ஆங்கிலம் அகன்றிடக்கூடாது என்று தொடர்ந்து போராடி வருகின்றனர். 
 
11,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாடு முழுவதும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 'ஹிந்தித்திணிப்பு' எதிர்ப்புத் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, ஒன்றியப் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்ப அல்லது தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக ஹிந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களான இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய மேலாண்மைக் கழகங்கள், அனைத்திந்திய மருத்துவஇயல் கழகம் மற்றும் ஒன்றியப் பல்கலைக்கழகங்களில் ஆங்கிலத்தை அப்புறப்படுத்தி ஹிந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும், இளைஞர்களின் வேலை வாய்ப்பில், கட்டாயத் தாள்களில் ஆங்கிலத்தை நீக்கி விட்டு, ஹிந்தியை மட்டுமே முதன்மைப்படுத்த வேண்டும் என்பதான ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா தலைமையிலான குழுவின் பரிந்துரையைக் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து 'ஹிந்தித்திணிப்பை' எதிர்த்து திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பாக இரண்டு கிழமைகளுக்கு முன்பு மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. இதன் பின்னர-; தமிழ்உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என ஒன்றிய அரசினை வலியுறுத்தி பத்துநாட்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே ஒன்றிய பாஜக அரசின் அடாவடி 'ஹிந்தித்திணிப்பை' எதிர்த்து பொதுக்கூட்டங்கள் நடத்திட திமுக திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து திமுக தரப்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் 'ஹிந்தித்திணிப்பு' எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்ற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொதுக்கூட்டங்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்களிடையே விளக்கும் வகைக்கு முன்னெடுக்கப்படவுள்ளன. மற்றும் அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு அறிக்கையை ஏற்கக் கூடாது என்று ஒன்றிய அரசை வலியுறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,415.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.