Show all

தமிழ்நாடு அரசின் மிகச்சரியான நகர்த்தல்! கோவை கார்வெடிப்பு நிகழ்வு விசாரணையை ஒன்றிய புலனாய்வு முகாமைக்கு மாற்றியது

கோவை உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் வளியுருளை வெடிப்பை வைத்து, தமிழ்நாட்டில் மதவாதப் பதட்டச் சுழ்நிலையை உருவாக்கும் மலிவு முயற்சியில் தமிழ்நாடு பாஜகவினர் ஈடுபட்டிருப்பதை முளையிலேயே கிள்ளி எறியும் நோக்கமாக, தமிழ்நாடு முதல்வரின் கோவை கார்வெடிப்பு நிகழ்வு விசாரணையை ஒன்றிய புலனாய்வு முகாமைக்கு மாற்றியது தமிழ்நாடு அரசின் மிகச்சரியான நகர்த்தல் என்று பாராட்டப்பட்டு வருகிறது.

10,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5124: கோவை உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் வளியுருளை வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணை குறித்தும், பொதுவான சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அது குறித்து அறிக்கையும் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், கார் வளியுருளை வெடிப்புச் நிகழ்வு தொடர்பாக காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணை குறித்தும், கோவை மாவட்டத்தில் செய்யப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கைப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த நிகழ்வு தொடர்பான வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்தும், கோவை மாவட்டத்தில் பாதுகாப்பை மேலும் உறுதி செய்திடவும் முதலமைச்சர் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இது போன்ற நிகழ்வுகளின் விசாரணையில், மாநிலம் தாண்டிய பரிணாமங்களும், பன்னாட்டுத் தொடர்புகளும் இருக்க வாய்ப்பிருப்பதால் இந்த வழக்கின் விசாரணையை ஒன்றியப் புலனாய்வு முகமைக்கு மாற்றுவதற்கு ஒன்றிய அரசுக்கு உரிய பரிந்துரைகளைச் செய்திட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

கோவை மாநகரின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த கரும்புக் கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று பகுதிகளில் புதிய காவல் நிலையங்களை உடனடியாக அமைக்கவும் வலியுறுத்தப்பட்டது. மாநிலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள், வருங்காலங்களில் நடைபெறாமல் தடுத்திடும் வகையில், காவல்துறையில் ஒரு சிறப்புப் படையை உருவாக்கிடவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. 

மேலும், கோவை உட்பட தமிழ்நாட்டின் முதன்மை நகரங்களிலும், மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய முதன்மைப் பகுதிகளிலும், கூடுதல் நவீன கண்காணிப்புக் கண்காணிப்புப் படக்கருவிகளை விரைவில் பொருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது. மாநிலத்தின் உளவுப் பிரிவில் கூடுதல் காவல்துறை அலுவலர்களை நியமனம் செய்ய வேண்டும். இது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரைப் பற்றியும், அவர்களோடு தொடர்பு வைத்திருப்பவர்களைப் பற்றியும் நுண்ணிய தகவல்களை அளிப்போருக்குத் தக்க பாதுகாப்பை வழங்கவும், அவர்களை ஊக்குவிக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு ஒன்றியப் புலனாய்வு முகமைக்கு விசாரணை மாறி இருப்பது குறித்து, திமுக செய்தி தொடர்பு இணைச்செயலாளர் இராஜீவ் காந்தி தெரிவிக்கும் போது, ஒரு விடையத்தில் தீவிரவாத சந்தேகம் இருந்தால் மாநில அரசு ஒப்புதல் இல்லாமலோ இல்லை மாநில அரசின் பரிந்துறையின்படியோ பிரிவு 43ஈ யின்படி ஒன்றிய அரசு எடுத்து கொள்ளலாம். 

இந்த நிகழ்வில் வேறு மாநில மற்றும் வெளிநாட்டுத் தொடர்பு இருப்பதாக சந்தேகம் வந்திருக்கிறது. இப்படி இருக்கும் போது சட்டப்படி தமிழ்நாடு அரசு இதில் நடவடிக்கை எடுக்க முடியாது, கூடாது. 2018 உபா சட்ட திருத்தத்தின்படி ஒன்றியப் புலனாய்வு முகமைதான் விசாரிக்க முடியும். எனவே வெளிநாட்டு தொடர்பு அல்லது வெளிநாட்டு தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் இருந்தால் கூட அதை ஒன்றியப் புலனாய்வு முகமைக்கு எடுத்து கொள்ள முடியும் என்கிற முகாந்திரம் இருப்பதால் இதை ஒன்றியப் புலனாய்வு முகமை விசாரிக்கலாம் என தமிழ்நாடு அரசு கருதுகிறது.

அதோடு அந்த ஆள் ஏற்கனவே ஒன்றியப் புலனாய்வு முகமை கண்காணிப்பில் இருந்தவர் என்கிற அடிப்படையிலும் இந்த விசாரணையை ஒன்றியப் புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கிறார்கள் என்று கூறியுள்ளார். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,414.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.