Show all

சிக்கன மிடுக்குப்பேசி வரிசையில், புதிதாக ரெட்மி5 என்றவகை செல்பேசியைக், களமிறக்கியிருக்கிறது சியோமி

02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தனது சிக்கன மிடுக்குப்பேசி வரிசையில் புதிதாக ரெட்மி5  என்ற வகையைக் களமிறக்கியிருக்கிறது சியோமி.

இதற்கு முன்பு வெளியான ரெட்மி4 சிக்கனப் பிரிவில் சாதித்த வகையாகும். அதன் மேலதிக பதிப்புதான் ரெட்மி5. இந்த மிடுக்குப்பேசி ஏற்கெனவே கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் அறிமுகப்படுத்தப் பட்டுவிட்டது. இரண்டு மாதங்கள் கழித்து தற்போழுது இந்தியாவில் வெளியாகியிருக்கிறது.

ரெட்மி4 உடன் ஒப்பிடும்பொழுது வடிவமைப்பு, படக்கருவி, மற்றும் செயல்திறனில் பெரிய அளவில் மாற்றம் செய்திருப்பதாகக் கூறுகிறது ஷியோமி. செல்பேசி சந்தையில் பிரபலத்தில் இருக்கும் அடக்கத்தை சிக்கன மிடுக்குப்பேசியில் கொடுப்பதை தொடக்கத்தில் இருந்தே ஷியோமி கடைப்பிடித்து வருகிறது. 

அதுபோல தற்போது பிரபலத்தில் இருக்கும் 18:9 காட்சித்திரையை இந்த மிடுக்குப்பேசியில் கொடுத்திருக்கிறது சிக்கன வகை மிடுக்குப்பேசியில் இந்த வசதியைக்கொண்டவைகள் குறைவு என்பது இதன் கூடுதல் அம்சம். மற்ற ரெட்மி மிடுக்குப்பேசிகள் போலவே தோற்றமளித்தாலும் வடிவமைப்பில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறது ஷியோமி.

18:9 காட்சித்திரை என்பதால் மூன்று ஊடுருவல் பித்தான்கள் காட்சித்திரைக்கு உள்ளேயே கொடுக்கப்பட்டிருக்கின்றன. ரெட்மி4 உடன் ஒப்பிடும்போது இதன் தடிமன் 11 விழுக்காடு குறைவானது. 

ரெட்மி 4-ல் குறைவான வெளிச்சத்தில் எடுக்கப்படும் புகைப்படங்களின் தரம் குறைவாக இருப்பதாக விமர்சனம் எழுந்தது. எனவே, இந்தப் பேசியில் படக்கருவியைச் சற்று மேம்படுத்தியிருக்கிறது. இதில் 12 மெகாபிக்ஸல் பின்புற படக்கருவி மற்றும் 5 மெகாபிக்ஸல் முன்புற படக்கருவி இருக்கிறது. வெளிச்சம் குறைவான இடத்தில் தம்படம் எடுப்பதற்கு உதவும் வகையில் முன்புற படக்கருவிக்கு ஒளிரி வசதி இருக்கிறது. இதில் இருக்கும் 3300எம்ஆம்மணி மின்கலன், பேசியை ஒருநாள் முழுவதும் பயன்படுத்துவதற்கு தேவையான சக்தியை அளிக்கும். கறுப்பு, நீலம், தங்கம் மற்றும் வெண்சிவப்புதங்கம் என மூன்று விதமான நிறங்களில் ரெட்மி 5 மிடுக்குப்பேசி விற்பனைக்கு வருகிறது. ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளம் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

சந்தையில் சாம்சங் கேலக்ஸி மற்றும் மோட்டோ என்ற இரண்டு மிடுக்குப்பேசிகளைத்தாம் ரெட்மி 5-யின் போட்டியாளராகக் கருதுகிறது ஷியோமி. அதே வேளையில் அந்த இரண்டு  மிடுக்;குப்பேசிகளுடன் ஒப்பிடும்போது இது எல்லாவிதத்திலும் சிறப்பான வசதிகளைக்கொண்டிருப்பதாகக் கூறுகிறது. தனது உயர்நுட்ப பேசிகளுக்கு இணையான தரத்திலேயே சிக்கன மிடுக்குப்பேசிகளும் தயாரிக்கப்படுவதாகவும், பல்வேறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் கூறுகிறது ஷியோமி. எனவே, கீழே விழுந்தாலும் அவ்வளவு எளிதில் இந்த செல்பேசி  பாதிப்படையாதாம். இந்தப் பேசியோடு ஒரு பின்பக்க உறையும் அளிக்கிறது. அமேசான் இணையதளத்திலும், வெளிக்கடைகளிலும் வரும் புதன் முதல் விற்பனைக்கு வருகிறது ரெட்மி. 2ஜிபி ரேம் 16ஜிபி வகை 7,999 ரூபாயாகவும், 3ஜிபி ரேம் 32ஜிபி வகை 8,999 ரூபாயாகவும் மற்றும்  4ஜிபி ரேம் 64ஜிபி வகை 10,999 ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,728.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.