Show all

திருமலையில் திருமணம் செய்பவர்களுக்கென தேவஸ்தானம் புதிய திட்டம்

திருமலையில் திருமணம் செய்பவர்களுக்கென தேவஸ்தானம் புதிய திட்டம் ஒன்றை தொடங்க உள்ளது.

திருமலையில் திருமணம் செய்வதை பல பக்தர்கள் பாக்கியமாக கருதுகின்றனர். அதனால் தேவஸ்தானம் திருமலையில் பாபவிநாசம் செல்லும் மார்கத்தில் புரோகித சங்கம் ஏற்படுத்தி உள்ளது. இங்கு திருமணம், காதுகுத்துதல் உள்ளிட்ட சுபகாரியங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் திருமலையில் உள்ள பல மடங்களிலும் திருமணங்கள் நடைபெற்று வருகிறது.

 

திருமலையில் 500 ரூபாய் முதல் 10 லட்சம் செலவில் திருமணங்கள் நடத்தபட்டு வருகிறது. திருமலை புரோகித சங்கத்தில் மட்டும் ஆண்டுதோறும் சுமார்  5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுகிறது. இந்தத் திருமணம் செய்ய விருப்பப்படுபவர்கள் மணமகள், மணமகனின் பிறப்பு சான்றிதழ், 2 ஆதார் அட்டை நகல், 2 குடும்ப அட்டை நகல், முகூர்த்த பத்திரிக்கை இணைத்து புரோகித சங்கத்தில் அளித்தால் அதை அவர்கள் பதிவு கொண்டு திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்குவர். இதற்காக தேவஸ்தானம் 500 ரூபாயை கட்டணமாக வசூலிக்கிறது. திருமணம் முடிந்தவுடன் அவர்கள் திருமண பதிவு சான்றிதழையும் புரோகித சங்கத்தில் பெற்று கொள்ளலாம்.

 

திருமலையில் திருமணம் செய்பவர்களுக்கு ஏழுமலையான் ஆசி பரிபூரணமாக கிடைக்கும் என பக்தர்கள் நம்புவதால் திருமண இடைதரகர்கள் அத்து மீறி நடந்து வருகின்றனர். திருமலையில் திருமணம் என்றவுடன் திருமணத்திற்கு தேவையான பொருட்கள், திருமண வீட்டார்கள் தங்க வாடகை அறைகள், உணவு, தாம்பூலம் என லட்சகணக்கில் அவர்கள் பணம் வசூலித்து விடுகின்றனர்.

 

இது குறித்து தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவராவிடம் பக்தர்கள் புகார் அளித்தனர். அந்த புகார் குறித்து  விசாரணை மேற்கொண்ட அவர் நேற்று கூறியதாவது. திருமலையில் திருமணம் செய்ய புதிய திட்டம் ஒன்று தொடங்கபட உள்ளது. இனி திருமலையில் திருமணம் செய்ய விரும்புவர்கள் இணையதளம் மூலம் வாடகை அறைகள், உணவு, திருமண பதிவு, லட்டு பிரசாதம் வாங்குவது உள்ளிட்ட அனைத்தையும் ஒரே இடத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் திருமணத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் தேவஸ்தானமே வழங்கும் விதம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதனால் இனி பக்தர்கள் எளிதாக, வசதியாக தங்கள் வீட்டு திருமணங்களை இடைத்தரகர்களை நாடாமல் நடத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.