Show all

விஜயகாந்த் எந்தப்பக்கம் சாய்வார்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருக்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அ.தி.மு.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க தி.மு.க. தயாராகி வருகிறது.

 

காங்கிரசுடன் கூட்டணி அமைத்த சூட்டோடு, தே.மு.தி.க.வையும் கூட்டணிக்கு இழுத்து வந்துவிட வேண்டும் என்பதில் தி.மு.க. மிகுந்த அக்கறையுடனும், ஈடுபாட்டுடனும் செயல்பட்டு வருகிறது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அமைத்த சில நிமிடங்களிலேயே, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்தார்.

 

தி.மு.க. தலைவர் கருணாநிதி விடுத்திருக்கும் அழைப்பை ஏற்று விஜயகாந்த் நிச்சயம் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் சேருவார் என்றும் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். இதனை ஏற்று விஜயகாந்தும் தி.மு.க. கூட்டணிக்கு உடனடியாக சென்று விடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தே.மு.தி.க. மாநாட்டில் விஜயகாந்த் காட்டிய எதிர்வினை வேறாக இருந்தது.

 

யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றோ? அல்லது தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கலாமா என்றோ தான் விஜயகாந்த் தொண்டர்களை பார்த்து கேட்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜயகாந்தோ மாற்றி யோசித்தார்.

 

முதல் அமைச்சர் ஆகும் எண்ணத்தில் இருக்கும் விஜயகாந்த், நான் ‘கிங்’ ஆக இருக்கணுமா?

கிங் மேக்கரா இருக்கணுமா?

என்று கேட்டு புதிய குண்டைத் தூக்கி போட்டார். இதனால் அரசியல் களமே கொஞ்சம் அதிர்ந்து போனது. இதனால் தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்த் சேருவாரா என்ற சந்தேகம் எழுந்தது.

 

விஜயகாந்தின் முடிவு தி.மு.க.வினர் மத்தியில் கொஞ்சம் கலக்கத்தையே ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பினும் விஜயகாந்தின் மனதை மாற்றி எப்படியும், தே.மு.தி.க.வை தி.மு.க. கூட்டணிக்கு கொண்டு வந்து விடலாம் என்று அக்கட்சியினர் உறுதியாக நம்புகிறார்கள்.

 

இதற்காக விஜயகாந்துடன் தொடர்ந்து ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்றே தி.மு.க.-காங்கிரஸ் கட்சியினர் காத்திருக்கிறார்கள்.

 

இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலில் தங்கள் கூட்டணியில் இருந்த விஜயகாந்தை சட்டமன்ற தேர்தலிலும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா கட்சியும் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

 

தே.மு.தி.க. தற்போது எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று கடந்த பல நாட்களுக்கு முன்னரே விஜயகாந்த் கூறி விட்டார்.

இருப்பினும் பா.ஜனதா கூட்டணியில்தான் விஜயகாந்த் இருக்கிறார் என்று அக்கட்சியின் தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

விஜயகாந்தை கூட்டணியில் சேர்த்துக் கொண்டால், அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக நிச்சயம் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம் என்று பா.ஜனதா கட்சி கணக்கு போட்டுள்ளது.

 

இதனால் அக்கட்சி தலைவர்களும் மிகவும் பொறுமையாக செயல்பட்டு வருகிறார்கள். கூட்டணி தொடர்பான விஜயகாந்த் பற்றிய கேள்விகளுக்கு நிதானமாகவே அவர்கள் பதில் அளித்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை வந்திருந்த பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவிடம் விஜயகாந்தின் முதல்-அமைச்சர் ஆசை பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது.

 

இதற்கு பதில் அளித்த அவர்

இது (முதல் அமைச்சர் வேட்பாளர் யார்? என்பது) ஒரு பிரச்சனையே இல்லை. அதையெல்லாம் பேசி தீர்த்துக்கொள்வோம் என்றே தெரிவித்தார். இதன் மூலம் விஜயகாந்தை கூட்டணியில் சேர்ப்பதற்காக எந்த தியாகத்தையும் செய்ய பா.ஜனதா கட்சி தயாராக இருப்பதாக தெரிகிறது.

 

இந்த நிலையில் நடுவண் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நாளை (சனிக்கிழமை) சென்னை வருகிறார். அவர் தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்களை சந்தித்து கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.

 

அதன் பிறகு அவர் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பை தொடர்ந்து

தே.மு.தி.க.-பா.ஜ.க. கூட்டணி உருவாகும் என்று கூறப்படுகிறது. இந்தக் கட்சிகளிடையே தொகுதி பங்கீட்டையும் நாளையே பேசி முடிக்க இரு கட்சி தலைவர்களும் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது.

 

இதற்கிடையே தே.மு.தி.க.-பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க.வையும் சேர்க்க தீவிர முயற்சி நடந்து வருகிறது. பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் பா.ம.க.

முதல் அமைச்சர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ஆகியோரையும் நடுவண் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

ஆனால் அந்தக் கூட்டணியில் பா.ம.க. இடம் பெறுமா? என்பது இன்னும் உறுதியாகவில்லை. கடைசி நேரத்தில் பா.ம.க.வும் பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

அதே நேரத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணி தலைவர்களும் விஜயகாந்தை தங்கள் கூட்டணியில் சேர்த்து விட வேண்டும் என்பதில் மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள்.

 

இப்படி விஜயகாந்தை கூட்டணிக்கு இழுக்க

தி.மு.க. பா.ஜனதா, மக்கள் நலக்கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. விஜயகாந்த் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதும் மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது. இதனால் விஜயகாந்த் எந்தப்பக்கம் சாய்வார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்துக் கொண்டே இருக்கிறது.

 

தற்போது தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய 2 கட்சிகளுமே வேட்பாளர் நேர்காணலை நடத்தி வருகின்றன. தி.மு.க. நேர்காணல் கடந்த 22-ந்தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மார்ச் 7-ந்தேதியுடன் நேர்காணல் முடிவடைகிறது.

 

அதே போல தே.மு.தி.க. சார்பில் தேர்தலில் போட்டியிடுபவர்களிடமும் விஜயகாந்த் நேர்காணலை நடத்தி வருகிறார். கடந்த 22-ந்தேதி தொடங்கிய இந்த நேர்காணல் மார்ச் 1-ந்தேதியுடன் முடிகிறது.

 

வேட்பாளர் நேர்காணலின் போதும் கூட்டணி தொடர்பான கருத்துக்களை விஜயகாந்த் கேட்டு வருகிறார். இவையெல்லாம் முடிந்த பின்னர் மார்ச் முதல் வாரத்தில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது பற்றிய அறிவிப்பை விஜயகாந்த் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.