Show all

நியூட்ரினோ ஆய்வகம் தேவையேயில்லை. தேவையென்று மோடி அரசு கருதினால் தமிழக இயற்கையை பலிகடாவாக்க வேண்டாம்

13,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தை அமைத்துக் கொள்ளலாம் என அனுமதி அளித்திருக்கிறது நடுவண் சுற்றுச்சூழல்துறை அமைச்சகம்.

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு இந்தத் திட்டத்தால் மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது, எனவே இந்தத்  திட்டத்தை தொடங்க அனுமதிக்கலாம் எனப் பரிந்துரைத்திருந்தது. அதைத் தொடர்ந்தே இந்த அனுமதியை சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. அதே வேளையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வனத்துறையின் அனுமதியைப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. 

இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் 30 நாட்களுக்குள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூட்ரினோ ஆய்வு மையத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால் கிராம மக்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்பு  இதை சிறப்புத் திட்டமாகச் செயல்படுத்தப்போவதால் இனி புதிதாகச் சுற்றுச்சூழல் அறிக்கைகள் தேவையில்லை, பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டமும் நடத்தத் தேவையில்லை என முடிவெடுக்கப்பட்டது சர்ச்சை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

இந்த நியுட்ரினோ ஆய்வுக் கூடத்தால் 1.என்ன பயன்? 2.யாருக்கு பயன்? 3.செலவுகள் என்ன? 4.பாதிப்புகள் என்ன? 5.இந்தத் திட்டத்திற்கும் தமிழகமே பலிகடாவாக்கப் படுவது ஏன்? 6.இந்தத் திட்டம் தொடர் உற்பத்தி சார்ந்ததா? 7.அந்த உற்பத்தி எத்தனை ஆண்டுகளுக்கு தொடர்ந்து கிடைக்கும்? 8.அந்த உற்பத்தியில் மாநிலத்திற்கு எவ்வளவு பகிர்ந்தளிக்கப் படும். 9.இந்தத் திட்டம் உலகத்தில் எங்காவது பரிசோதிக்கப் பட்டிருக்கிறதா? 10.இந்த திட்டத்தால் அந்த நாடு அடைந்த முன்னேற்றம் என்ன? இதற்கெல்லாம் உண்மையான விடையைக் கொடுத்தால் மழலையர் வகுப்பு படிக்கும் குழந்தை சொல்லி விடும் இந்தத் திட்டம் தேவையா? தேவையில்லையா என்று.

நாம் அந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடைத் தேடிப் பார்க்கலாமா?

1.இந்த நியுட்ரினோ ஆய்வுக் கூடத்தால் என்ன பயன்? 

இந்தத் திட்டத்தால் கிடைக்கப் போகிற பரிசோதிக்கப் பட்ட பலன்கள் என்று எதுவும் இல்லை. இந்தத் திட்டம் கோலார் தங்கச் சுரங்கத்தில் முயற்சிக்கப் பட்டதுதான். அங்கு கிடைத்த பலன் என்றும் ஏதும் இல்லை. பெரிய பலன் தரும் திட்டம் என்றால் அங்கேயே அப்படியே தொடராமல், தங்கம் கிடைக்க வில்லை என்று சொல்லி அந்த சுரங்கத்தை மூடுகிறோம் என்றால் அந்தத் திட்டத்தால் அடையப் போகும் பலன் கண்டறியப் படவில்லை என்பதே உண்மை.

இந்தத் திட்டத்தால் கிடைக்கப் போகும் பலன்கள் எல்லாம் விஞ்ஞானிகள் கிடைக்கலாம் என்று தெரிவிக்கிற பலன்கள்தான். 

2.யாருக்கு பயன்? 

வெண்ணெய்யை வைத்துக் கொண்டு நெய்யுக்கு அலைவது என்று சொல்வார்களே அந்தக் கதைதான், புதிதாக இந்தத் திட்டத்திற்கு சுரங்கம் தோண்டும் வேலை. இன்னும் தோண்டினால் தங்கம் கிடைக்கும் இன்னும் தோண்டினால் தங்கம் கிடைக்கும் என்று எல்லையில்லா ஆழம் தோண்டிவிட்ட கோலார் தங்கச் சுரங்கத்தில் இது போன்ற ஆயிரம் ஆய்வுகளை செய்து பார்க்கலாம். 3.செலவுகள் என்ன? 

திட்டம் தொடங்கும் போது ரூ1200 கோடி என்று சொல்லப் படுகிறது. திட்டம் முடியும் போது அது எத்தனை கோடியாக இருக்கும் என்பதை சொல்ல முடியாது.

4.பாதிப்புகள் என்ன?

வெறுமனே ஆய்வுக்காக, கோலார் சுரங்கம் போன்று ஒரு ஆழமான சுரங்கம், தமிழகத்தில், உலகத்தின் மிகப் பழமையான மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தோண்டப்படும். அந்தப் பகுதி முழுவதும் நிலத்தடி நீர் சுழி நிலைக்கு எடுத்துச் செல்லப்படும். அந்தப் பகுதி முழுவதும் தரைக்குள் பாதுகாப்பாக இருக்கும் வேதிப் பொருட்களால் நிரம்பி வேளாண்மை சுழி நிலைக்கு எடுத்துச் செல்லப் படும். அந்தப் பகுதி முழுவதும் வேதிப்பொருட்களால் ஆன புழுதி கிளப்பப் பட்டு மனிதர்களின் இயல்பான நடமாட்டம் சுழி நிலைக்கு எடுத்துச் செல்லப்படும்.  

5.இந்தத் திட்டத்திற்கும் தமிழகமே பலிகடாவாக்கப் படுவது ஏன்? 

இப்போதைக்கு தமிழக மக்கள் நலன் கருதாத பாஜக அடிமை ஆட்சி நடைபெறுவதொன்றே முதன்மைக் காரணம்.

6.இந்தத் திட்டம் தொடர் உற்பத்தி சார்ந்ததா? 

உற்பத்தியெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது.

7.அந்த உற்பத்தி எத்தனை ஆண்டுகளுக்கு தொடர்ந்து கிடைக்கும்? 

மனிதர்களோ, விலங்குகளோ, தாவரங்களோ வாழ முடியாத புழுதிக்காடாக உலகம் உள்ளவரை இருக்கும்.

8.அந்த உற்பத்தியில் மாநிலத்திற்கு எவ்வளவு பகிர்ந்தளிக்கப் படும்.

சேதாரம் தானே! அதனால் முழுக்க முழுக்க தமிழ் மக்களுக்கே. 

9.இந்தத் திட்டம் உலகத்தில் எங்காவது பரிசோதிக்கப் பட்டிருக்கிறதா?

இத்தாலி கரோன் சாஜோ மலையில் அமைந்துள்ள நியூட்ரினோ ஆய்வகத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு வேதியியல்; கசிவு எற்ப்பட்டதன் விளைவாக மக்கள் மீதும், காட்டுஉயிர்கள் மீதும், நிலத்தடி நீர் மீதும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறி, அந்த நியூட்ரினோ ஆய்வகத்தை 2003 ஆம் ஆண்டு இத்தாலி அரசாங்கம் மூடியது.

10.இந்த திட்டத்தால் அந்த நாடு அடைந்த முன்னேற்றம் என்ன? 

இது போன்ற கேணத்தனமான முடிவுகளை உலகத்தில் முந்திக் கொண்டு எடுத்து நாம் கோமளிகளாகவும் மக்களை ஏமாளிகளாகவும் ஆக்கக் கூடாது என்கிற பாடம் கற்றது தான்.

உலகம்;, தற்போது வரை இயற்கையைப் பாரபட்சம் இல்லாமல் அழித்து ஆதாயம் தேட முயன்று கொண்டிருந்தது. தற்போதோ இயற்கைக்கு பங்கம் வராமல் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தும் முயற்சியில் பயணித்துக் கொண்டிருக்கும் போது, இயற்கையை அழித்து, ஆதாயம் பெற தமிழக இயற்கையை பலிகடாவாக்கி பரிசோதிக்கிறது மோடி அரசு.

எந்த மூளைச்சலவைக்கும் மயங்காமல், நியுட்ரினோ திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தும் முயற்சியைக் களையெடுப்பது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,739.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.