Show all

இந்தியத் தேர்தல் ஆணையம் அதிரடி! தமிழ்நாட்டில் ஏழு கட்சிகள், இந்திய அளவில் 86கட்சிகள் நீக்கம்

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு 5 ஆண்டுகளில் தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல்களில் நிற்கவில்லை என்றால் அத்தகைய கட்சிகள் செயல்படாதவை. அதேபோல ஆறு ஆண்டுகள் தொடர்ச்சியாக தேர்தலில் நிற்கவில்லை என்றால் அவை பதிவு செய்யப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்படும் அடிப்படையில் தமிழ்நாட்டில் ஏழு கட்சிகள், இந்திய அளவில் 86கட்சிகள் நீக்கம.;
 
29,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: புதிய நீதிக்கட்சி உள்பட தமிழ்நாட்டில் கடந்த ஆறு ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத ஏழு கட்சிகளின் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் களைவு செய்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த வகை நடவடிக்கையால் இந்தியாவில் உள்ள 86 கட்சிகள் அங்கீகாரத்தை இழந்துள்ளன. 

தமிழ்நாட்டில், கொங்குநாடு ஜனநாயக கட்சி, மக்கள் மறுமலர்ச்சி முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் தொண்டர்கள் கட்சி, தேசபக்தி, புதிய நீதிக்கட்சி, தமிழ் மாநில காயிதே மில்லத் கழகம், தமிழர் கழகம் ஆகிய கட்சிகளின் அங்கீகாரம் களைவு செய்யப்பட்டுள்ளது. 

இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கோரி பதிவு செய்யும் அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறவேண்டுமென்றால் மாநில சட்டமன்ற தேர்தல்களிலும், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும் தனித்தோ, கூட்டணியாகவோ குறிப்பிட்ட விழுக்காடு வாக்குகளை பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்படும். 

இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு 5 ஆண்டுகளில் தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல்களில் நிற்கவில்லை என்றால் அத்தகைய கட்சிகள் செயல்படாதவை. அதேபோல ஆறு ஆண்டுகள் தொடர்ச்சியாக தேர்தலில் நிற்கவில்லை என்றால் அவை பதிவு செய்யப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, தமிழ்நாடு உள்ளிட்ட ஏழு மாநிலங்களில், கடந்த ஆறு ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாமல் இருந்த 86 கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் களைவு செய்துள்ளது. 

இதுவரை பதிவு செய்யப்பட்டு, அங்கீகாரம் பெறாத 253 கட்சிகளையும் செயல்படாத கட்சிகள் எனக் குறிப்பிட்டு பட்டியலை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம். செயல்படாத கட்சிகள் பட்டியலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜய டி.ராஜேந்தரின் இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட 22 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

அதிமுக சார்பில் பாராளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த ஏ.சி.சண்முகம் பின்னர் புதிய நீதிக்கட்சியை தொடங்கினார். புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவரான ஏ.சி.சண்முகம் அண்மைத் தேர்தல்களில், பாஜக, அதிமுக சின்னங்களில் போட்டியிட்டார். இதனால், அவரது கட்சி கடந்த ஆறு ஆண்டுகளில் தேர்தலில் போட்டியிடவில்லை. இதனால், அக்கட்சியின் அங்கீகாரம் களைவு செய்யப்பட்டுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,371.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.