Show all

நஜீப் ஜங் ராஜினாமாவுக்கு கேஜ்ரிவால் அரசுடன் ஓயாத அதிகாரத் தகராறு காரணமா

 

     டெல்லி மாநில துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை நடுவண் அரசுக்கு நஜீப் ஜங் அனுப்பிவிட்டார். டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுடன் தொடக்கம் முதலே அவருக்கு இருந்த மோதல்தான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது. டெல்லியில் ஆளுநருக்குதான் முதல்வரை விட அதிக அதிகாரம் என்பது இந்த மோதலுக்கு முதல் காரணமாக இருந்தது.

நஜீப் ஜங் பதவிக்காலம் முழுவதும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுடன் மோதலாகவே இருந்து வந்தது. டெல்லி அதிகாரிகள் நியமனத்தில் தொடங்கி அனைத்து விவகாரங்களிலும் மோதல் ஏற்பட்டது. டெல்லி துணைநிலை ஆளுநரின் அதிகாரத்தை எதிர்த்து டெல்லி அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தொடர் மோதலால் விரக்தி அடைந்து பதவியை நஜீப் ஜங் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2015-ல் நடுவண் அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கவும், இடமாற்றம் செய்யவும் துணைநிலை ஆளுநருக்கு தான் அதிகாரம் உள்ளது என்று கூறப் பட்டிருந்தது. நடுவண் அரசின் கட்டுப் பாட்டில் உள்ள அதிகாரிகளிடம் டெல்லி ஊழல் தடுப்பு அமைப்பு (ஏசிபி) விசாரணை நடத்த முடியாது என்றும் கூறப்பட்டிருந்தது. நடுவண் அரசின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும் துணைநிலை ஆளுநர் அரசுக்கு ஒத்துழைக்க மறுப்பது குறித்தும் மொத்தம் 9 மனுக்களை ஆம் ஆத்மி அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மனுக்களை தலைமை நீதிபதி ஜி.ரோஹினி மற்றும் நீதிபதி ஜெயந்த் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு மொத்தமாக விசாரித்தது. இந்நிலையில் இந்த மனுக்கள் மீது தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், டெல்லியின் நிர்வாக தலைவர் துணைநிலை ஆளுநர்தான். அவருக்குதான் அதிகாரம் உள்ளது. அவருடைய ஒப்புதல் இல்லாமல் அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது என உத்தரவிட்டனர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து, டெல்லி அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் ஏழு வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, கேஜ்ரிவால் தலைமையிலான அரசு பிறப்பித்த, பல்வேறு உத்தரவுகள் தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்ய, தனிக் குழுவை, நஜீப் ஜங் அமைத்தார். முன்னாள் தலைமை தணிக்கை அதிகாரியான, வி.கே.சுங்லு தலைமையில், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர், என்.கோபாலசாமி, முன்னாள் மத்திய கண்காணிப்பு ஆணையர் பிரதீப் குமார் ஆகியோர் அடங்கிய குழு, 400க்கும் மேற்பட்ட கோப்புகளை ஆய்வு செய்தது. இந்த குழு, தன் அறிக்கையை, துணைநிலை ஆளுனர் நஜீப் ஜங்கிடம், அளித்தது. இந்த பரபரப்பு சூழ்நிலையில் திடீரென துணை நிலை ஆளுநர் பதவியை நஜீப் ஜங் ராஜினாமா செய்துள்ளார். போதும்ப்பா சாமி என்ற விரக்தியில் அவர் வெளியேறியிருக்கலாம் என கூறப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.