Show all

நாகாலாந்து சட்டமன்றத் தேர்தல்! காங்கிரஸ் உள்ளிட்ட 10 கட்சிகளோடு, பாஜக மாநிலப் பிரிவும் புறக்கணிப்பாம்

17,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாகா மக்கள் எந்த முடியாட்சிக்குக்கீழும் இல்லாமல் இறையாண்மையோடு பல தலைமுறைகளாக இருந்து வந்தனர். முதல் முறையாக பிரி;த்தானியர் தமிழ்தொடர்ஆண்டு-4933 இல் (1832) அசாமிற்கும் மணிப்பூருக்கும் இடையே நேர்வழியைக் கண்டுபிடிக்க முயற்சித்தபோது நாகாலாந்திற்குள் நுழைந்தனர். அவர்களை அப்போது அனைத்து நாகா கிராமங்களும் எதிர்த்தன.

பிரித்தானியர் நாகாலாந்தை தங்கள் ஆளுமைக்குக்கீழ் கொண்டுவர எண்ணிச் செயல்பட்டனர். அவர்களால் அவ்வளவு எளிதில் அதைச் செய்யமுடியவில்லை. 47 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது நாகாலாந்தின் தலைநகரமாக இருக்கும் கொகிமாவிற்கு அருகில் உள்ள கிராமத்தில் நடந்த போரில் பிரித்தானியர் நாகா மக்களை முறியடித்தனர். பின்னர் அடுத்த ஆண்டில் அமைதிப் பேச்சுவார்த்தை வழியாக நாகாலாந்து பிரித்தானியரின் ஆட்சியின்கீழ் கொண்டு வரப்பட்டது.

பிரித்தானிய ஆட்சியின் காரணமாக, அதற்கு முன் தனித்தனி கிராமங்களாக இருந்த நாகா மக்களெல்லாம் நாகா என்ற ஒற்றை அடையாளத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். இது நாகா மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த காரணமாயிற்று.

தமிழ்தொடர்ஆண்டு-5030 இல் (1929) பிரித்தானிய சைமன் கமிசனிடம் நாகா கிளப்ப் (பின்னர் இது நாகா தேசிய கவுன்சிலாக ஆனது) நாகா மக்களின் கோரிக்கை சமர்பிக்கப்பட்டது. அதில் பிரித்தானிய இந்தியாவில் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் புதிய வரிகளில் இருந்து தங்களுக்கு விலக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வது, பிரித்தானிய இந்தியா தங்களுக்கு விடுதலை அளிக்க வேண்டுமென்று எண்ணினால் தயவுகூர்ந்து தங்களை யாரின் கீழும் விட்டுவிடாமல் நாகாலாந்து பழைய காலங்களில் எப்படி இருந்ததோ அப்படியே விட்டுவிடும்படி கேட்டுக்கொள்கிறோம். என கோரினர்.

இந்திய விடுதலைக்கு முன்னர் நாகா தேசிய கவுன்சில் பிரதிநிதிகள் தில்லியில் காந்தியைச் சந்தித்தனர். அவர்களுடன் நீண்ட கலந்துரையாடல் நடத்திய காந்தி, “இந்திய ஒன்றியத்துடன் இணைய விரும்பவில்லை என்றால், சுதந்திரமாக இருப்பதற்கு நாகாலாந்திற்கு அனைத்து உரிமையும் உண்டு” என்று உறுதியளித்தார்.

அதன்படி நாகாலாந்து இந்திய விடுதலைக்கு ஒரு நாள் முன்னதாக தமது விடுதலையை அறிவித்தது. இதை இந்திய ஒன்றிய அரசு எதிர்த்தது. நாகா மக்களின் ஒருமித்த கருத்தை இந்தியாவிற்குத் தெரிவிக்க பொது வாக்கெடுப்பு நடத்த இந்திய குடியரசுத்தலைவருக்கு மனு அளிக்கப்பட்டது. அது பொருட்படுத்தப்படாததால் 02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5053 அன்று (16.05.1951) பொது வாக்ககடுப்பு நடத்தி அந்த வாக்குச்சீட்டுகளை ஒன்றிணைத்து, 80 பவுண்ட் கொண்ட ஒரு புத்தகமாக இந்தியக்குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்கள். அடுத்த ஆண்டு இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற போது நாகாலாந்து மக்கள் அதனை முழுமையாகப் புறக்கணித்தனர்.

இந்தியா விடுதலை பெற்ற பிறகு, நாலாந்து அஸ்ஸாம் மாகாணத்தின் பகுதியாக ஆக்கப்பட்டிருந்தது. இதனால் நாகர்களின் ஒரு பிரிவினரிடையே தேசியவாத நடவடிக்கைகள் உருவாயின. இந்த இயக்கமானது தொடர்ந்த வன்முறை சம்பவங்களுக்கு வழிவகுத்தது, அது அரசாங்க மற்றும் சிவில் உள்கட்டமைப்புகளைச் சேதப்படுத்தியது, அரசாங்க அதிகாரிகள் மற்றும் பொதுமக்களைத் தாக்கியது.

இதைத் தொடர்ந்து இந்திய ஒன்றிய அரசு இந்திய ராணுவத்தை அனுப்பியது. நாகா தலைவர்களுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டது அதன்படி நாகா மலைகளைக் கொண்டு ஒரு தனி பகுதியை உருவாக்க முடிவெடுக்கப்பட்டது. இதில் திருப்தி அடையாத பழங்குடியினர், மாநிலத்துக்கள் மீண்டும் வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டனர். இராணுவம் மற்றும் அரசாங்க நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றின்மீது தாக்குதல்;களை அதிகரித்தனர்.

நாகாலாந்தில் இந்திய அரசானது ஆயுதப் படைச் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் இயற்றியது. மூன்று பேருக்கு ஒரு இரானுவ வீரர் என்ற விகிதத்தில் இராணுவம் அங்கு குவிக்கப்பட்டது. பின்னர் துணை இராணுவப் படையினால் பலர்கொல்லப்பட்டனர்.

பிரதமர் நேரு மற்றும் நாகா மக்கள் மாநாட்டு தலைவர்களுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னர், 16- அம்ச ஒப்பந்தம் உருவானது. இதன்படி, நாகாலாந்தை இந்திய ஒன்றியத்துக்கு உட்பட்ட முழுமையான மாநிலமாக இந்திய அரசு அங்கீகரித்தது.

இந்த ஒப்பந்தத்தின் இரண்டாவது அம்சத்தின் படி நாகாலாந்து இந்திய வெளியுறவுத் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது. வருமான வரிவிலக்கு போன்ற அம்சங்களும் இதில் அடங்கும். இந்த 16 அம்ச ஒப்பந்தம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.

அதன்படி, நாகாலாந்து இடைக்கால விதிமுறை விதிகளின் கீழ, அந்த பிரதேசமானது, பழங்குடியினர், பழக்கவழக்கங்கள் மற்றும் அந்தந்த பழங்குடியினரின் பயன்பாடு ஆகியவற்றின்படி பழங்குடியினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட 45 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு இடைக்கால அமைப்புக்குகீழ் விடப்பட்டது. இதன் விளைவாக, நாகலாந்து மாநில சட்டம் உருவானது. 27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5065 அன்று (11.01.1964) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாகாலாந்து சட்டமன்றம் அமைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்தும் கிளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் தாக்குதல்கள் தொடர்ந்தன. பேச்சுவார்த்தைகள் அறிவிக்கப்பட்டன, பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன, ஆனால் இதனால் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தவில்லை.

இந்திய அரசாங்கம் தன்னிச்சையாக வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்குக் கீழ் இருந்த நாகாலாந்தை உள்துறை அமைச்சகத்திற்குக் கீழ் கொண்டு வந்தது. நாகாலாந்து சட்டமன்றத்தில், மீண்டும் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்குக் கீழ் கொண்டு வரவேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்திரா காந்தியால் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. மிகப்பெரும் கிளர்ச்சி குழுக்களின் தலைவர்கள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு, இந்திய அரசியலமைப்பை ஏற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டார்கள், ஆனாலும் ஒரு குழு இதை ஏற்றுக்கொள்ளவில்லை மேலும் அவர்களது கிளர்ச்சி நடவடிக்கைகள் தொடர்ந்தன.

டி.ஆர்.சிலியாங் நாகாலாந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த அரசியல்வாதியும் நாகாலாந்து மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சரும் ஆவார்.

தற்போதும் நாகாலாந்தில், ‘நாகலிம் தனி நாடு கோரி பல ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. தனி நாடு கோரிக்கைக்காக வன்முறைப் பாதையில் போராடி வந்த போராளிக் குழுக்களுக்கும் ராணுவத்துக்கும் தொடர்ந்து சண்டை நடைபெற்று வந்தது. அவர்களுடன் நடத்தப்பட்ட பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடுவண் அரசுக்கும், நாகா போராளிக் குழுக்களுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்பின்னர் பேச்சுவார்த்தையும் தொடங்கப்பட்டது. எனினும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த சூழ்நிலையில் நாகாலாந்து சட்டமன்றத்திற்கு 15,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 இல் (27.02.2018) தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிக்கை நாளை வெளியிடப்பட உள்ளது. அதன்பின்னர் வேட்பு மனு பதிகை தொடங்கும்.

ஆனால், நாகா பிரச்சினைக்கு தீர்வு காணப்படாததால் தேர்தலைப் புறக்கணிக்க 11 தலையாய கட்சிகள் முடிவு செய்து அறிவித்துள்ளன.

ஆளுங்கட்சியான நாகா மக்கள் முன்னணி, அதன் கூட்டணி கட்சியான பா.ஜ.க.வின் மாநில பிரிவு மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில பிரிவு, ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, தேசிய மக்கள் கட்சி, நாகாலாந்து ஜனநாயக முன்னேற்றக் கட்சி, ஐக்கிய நாகாலாந்து ஜனநாயக கட்சி, நாகாலாந்து காங்கிரஸ் உள்ளிட்ட 11 தலையாய கட்சிகள் இந்த தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை என்று கூட்டு பிரகடன அறிவிப்பில் கையெழுத்திட்டுள்ளன.

மேலும், தேர்தல் ஆணையம் தேர்தல் தொடர்பான அறிவிக்கையை வெளியிட்ட நிலையில், நாளை மறுநாள் அதாவது வியாழக்கிழமை மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நடுவண் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நாகாலாந்து பழங்குடி ஹோகோ அமைப்பு மற்றும் சமூக அமைப்புகளின் மையக் குழு இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

தேர்தலுக்கு முன் நாகா பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கை ஆகும். தேசிய மற்றும் பிராந்திய கட்சிகள் அனைத்தும் இந்த விசயத்தில் ஒன்றிணைந்து புறக்கணிக்கப் போவதாக கூறியிருப்பதால், எதற்குதாம் தேர்தல் என்ற கேள்வி எழுந்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,683

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.