Show all

மாட்டு வண்டி போராட்டம் பாண்டிச்சேரியில்! பாஜக அரசின் பொட்ரோல் விலையேற்றத்திற்கு எதிராக

17,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: புதுவை மறைமலையடிகள் சாலையில் உள்ள வெங்கட சுப்பா ரெட்டியார் சிலை அருகில் இருந்து, பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து மாட்டு வண்டி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்து மாட்டு வண்டியை ஓட்டி சென்றார்.

போராட்டத்துக்கு மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா தலைமை தாங்கினார். அமைச்சர் கந்தசாமி, ஜெயமூர்த்தி சட்டமன்றஉறுப்பினர். காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகம், தனுசு, கருணாநிதி மற்றும் மாநில, மாவட்ட, வட்டார மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஊர்வலம் மறைமலையடிகள் சாலை, அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக தலைமை அஞ்சல் நிலையத்தை அடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி மாட்டு வண்டியில் இருந்தபடியே பேசினார். அவர் பேசியதாவது:-

காங்கிரஸ் அரசில் கச்சா எண்ணெய் 124 டாலராக இருந்த போது, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.60 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.48 ஆகவும் இருந்தது. கச்சா எண்ணெய் அதிக விலைக்கு விற்ற போதும் பெட்ரோல், டீசல் விலையை காங்கிரஸ் அரசு உயர்த்தவில்லை.

மோடி பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்தார். ஆனால், எதையும் நிறைவேற்றவில்லை. மோடிக்கு எதிராக பேசினால் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும். ராகுல்காந்தி தலைமைஅமைச்சர் ஆவது நிச்சயம். மோடியின் செயல்பாடுகளால் பா.ஜனதா கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேறி வருகின்றன. இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து முதல்- அமைச்சர் நாராயணசாமி, துணை பேரவைத் தலைவர் சிவக் கொழுந்து, முன்னாள் அமைச்சர் வல்சராஜ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் அஞ்சல் நிலையம் அருகில் இருந்த தேநீரகத்தில் அமர்ந்து தேநீர் அருந்தினர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,683

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.