Show all

மோடியின் தூய்மை இந்தியா திட்டம்! கழிப்பறைகளும், குடிக்க தண்ணீரும் இல்லாத 450000 அங்கன்வாடி மையங்கள்

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்தியாவில் உள்ள 13.6 லட்சம் அங்கன்வாடி மையங்களில் 4.5 லட்சம் அங்கன்வாடி மையங்களில் கழிப்பறைகளும், குடிக்க தண்ணீரும் இல்லை என்று நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை பட்டியலிட்டுள்ளது.

இந்தியாவில் மொத்தம் 13.6 லட்சம் அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இவை நடுவண் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாகும். பள்ளிக்கு செல்வதற்கு முன்னர் இங்கு குழந்தைகள் சேர்க்கப்படுவர்.

அவர்களுக்கு போதிய ஊட்டச்சத்துடன் மதிய உணவு, நோய் தடுப்பு திட்டங்கள், மருத்துவ பரிசோதனை ஆகிய 6 சேவைகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் அங்கன்வாடி மையங்களில் உள்ள வசதி வாய்ப்புகள் குறித்து மனித வள மேம்பாட்டு துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வு செய்தது. அதன்படி அந்த ஆய்வறிக்கையை நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்தியாவில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 36 விழுக்காடு மையங்களில் கழிப்பறை வசதி இல்லை. அதுபோல் 25 விழுக்காடு மையங்களில் குடிதண்ணீர் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்தது. இதுபோல் மொத்தம் 4.5 அங்கன்வாடி மையங்கள் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் 21 விழுக்காடு அங்கன்வாடி மையங்களிலும், அருணாசலப்பிரதேசத்தில் 28 விழுக்காடு மையங்களிலும், உத்தரகாண்ட் 29 விழுக்காடு மையங்களிலும், கர்நாடகாவில் 38 விழுக்காடு மையங்களிலும், தெலுங்கானாவில் 40 விழுக்காடு மையங்களிலும், ஜம்மு- காஷ்மீரில் 48 விழுக்காடு மையங்களிலும் மகாராஷ்டிராவில் 53 விழுக்காடு மையங்களிலும் மட்டுமே குடி நீர் வசதி உள்ளன. அதுபோல் தெலுங்கானாவில் 21.30 விழுக்காடு மையங்களிலும், மணிப்பூரில் 27 விழுக்காடு மையங்களிலும், ஜார்க்கண்டில் 38 விழுக்காடு மையங்களிலும் ஆந்திராவில் 43 விழுக்காடு மையங்களிலும் ஜம்மு- காஷ்மீரில் 44 விழுக்காடு மையங்களிலும் அஸ்ஸாமில் 47 விழுக்காடு மையங்களிலும் அருணாசலில் 48 விழுக்காடு மையங்களிலும் ஒடிஸாவில் 52 விழுக்காடு மையங்களிலும் மட்டுமே கழிப்பறை வசதி உள்ளன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,722. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.