Show all

காவிரி நீர்ப்பங்கீடு! சரியான நபர்களால், சரியான அமைப்பை உருவாக்கி விட்டால் இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கு நல்லது

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி நீர்ப் பங்கீடு விவகாரத்தில் உச்ச அறங்கூற்றுமன்றம் வழங்கியுள்ள இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்வதற்காக, சம்பந்தப்பட்ட 4 மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தில்லியில் நேற்று நடைபெற்றது. 

நடுவண் அரசு ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்துக்கு மத்திய நீர்வளத் துறை செயலாளர் யு.பி. சிங் தலைமை வகித்தார். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப் பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் ஆர். சுப்பிரமணியன், 

கர்நாடக அரசின் தலைமைச் செயலாளர் ரத்ன பிரபா, நீர்வளத் துறை செயலாளர் ராகேஷ் சிங், 

கேரளத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் (நீர்வளத் துறை) டோம் ஜோஸ், 

புதுச்சேரி தலைமைச் செயலாளர் அஸ்வினி குமார், நீர்வளத் துறை செயலாளர் அன்பரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

பின்னர் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து மத்திய நீர்வளத் துறை செயலாளர் யு.பி. சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

மாநிலங்களுக்கு இடையிலான ஆற்றுநீர் தாவா சட்டத்தின்படி செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும் என உச்ச அறங்கூற்றுமன்றம் இறுதித் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. செயல் திட்டத்தின் வடிவம், செயல்பாடுகள், பங்கு, பொறுப்பு ஆகியன குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 

இதுபோன்ற செயல் திட்டம் நாட்டில் ஒன்றுக்கு மேல் உள்ளது. உதாரணமாக, ‘பாக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம்’ ‘நர்மதை கட்டுப்பாட்டு ஆணையம்’ ஆகியவற்றை குறிப்பிடலாம். பாக்ரா வியாஸ் மேலாண்மை வாரியத்தைப் பொருத்தவரையிலும், சொத்துகளை நடுவண் அரசு எடுத்துக் கொண்டது. நர்மதை கட்டுப்பாட்டு ஆணையத்தைப் பொருத்தவரை சொத்துகள் மாநிலங்களிடமே உள்ளன. இந்நிலையில், இதுபோன்ற செயல் திட்டத்தை உருவாக்குவதற்கு முன்பு, நான்கு மாநிலங்களின் கருத்தை அறிய விரும்பினோம். இதை தொடர்ந்து, மாநிலங்கள் தங்களது கருத்துகளையும் பரிந்துரைகளையும் வாய்மொழியாக தெரிவித்துள்ளன. எழுத்துப்பூர்வமான பரிந்துரைகளை 4 மாநிலங்களும் செவ்வாய்க்கிழமைக்குள் அளிக்கும்.

உச்ச அறங்கூற்றுமன்ற இறுதி தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள செயல் திட்டத்தை எப்படியும் வரையறுக்க முடியும்.

செயல் திட்டத்துக்கான உறுப்பினர்களை நியமிப்பது குறித்து தற்போதைய நிலையில் விவாதிக்கப்படவில்லை. நடுவர் மன்றம் இரு அடுக்கு அமைப்புகளைக் கொண்ட பரிந்துரைகளை அளித்துள்ளது. முதல் அமைப்பு (வாரியம்) தொடர்பாக நடுவண் அரசு அறிவிக்கை வெளியிட வேண்டும். பின்னர் அந்த வாரியம் ஒழுங்காற்று ஆணையம் குறித்த அறிவிப்பை வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நான்கு மாநிலங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுவான அமைப்பாக இருக்கும். எது மாதிரியான செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்பது குறித்தே கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. உச்ச அறங்கூற்றுமன்றம் தெரிவித்துள்ள காலவரையறைக்குள் செயல் திட்டத்தை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. எதிர்காலத்தில் நீரின் அளவை கணக்கீடு செய்வதற்கு தொலைப் பதிவு முறை (டெலிமெட்ரி) அறிமுகப்படுத்தப்படும் என்றார் யு.பி. சிங். 

உச்ச அறங்கூற்றுமன்றம் அளித்திருந்த இறுதித் தீர்ப்பில் தமிழகத்துக்கு 14.75 டிஎம்சி குறைக்கப்பட்டு, 177.25 டிஎம்சியும், கர்நாடகத்துக்கு 284.75 டிஎம்சியும், கேரளத்துக்கு 30 டிஎம்சியும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சியும் ஒதுக்கி உத்தரவிட்டிருந்தது. தமிழகம் பாசனத்துக்காக 10 டிஎம்சி நிலத்தடி நீரைப் பயன்படுத்தவும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய நீர்வளத் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால்; கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் உருவாக்கப்பட வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக மாநிலங்களின் ஒப்புதல் தேவைப்படுகிறது. 

எனவே, சம்பந்தப்பட்ட4 மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் பங்கேற்ற கூட்டம் மிகவும் முதன்மையானதாகும் என்றார்.

இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கருத்துகள் குறித்து தமிழக அரசு தெரிவித்துள்ளதாவது: உச்ச அறங்கூற்றுமன்ற தீர்ப்பின்படி, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறு, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை 6 வாரங்களுக்குள் நடுவண் அரசு அமைக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவுகளை திறம்பட செயல்படுத்துவதற்கு, அனைத்து அதிகாரங்களும் கொண்டதாக, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகள் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்துக்குப் பிறகு கர்நாடக அரசின் தலைமைச் செயலாளர் ரத்ன பிரபா செய்தியாளர்களிடம் கூறுகையில்,  உச்ச அறங்கூற்றுமன்ற இறுதி தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள செயல் திட்டம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதே கூட்டத்தின் ஒருமித்த முடிவாக இருந்தது என்றார். 

தீர்ப்பில் மேலாண்மை வாரியம் என குறிப்பிடவில்லை

கூட்டத்துக்கு பிறகு மத்திய நீர்வளத் துறை செயலாளர் யு.பி. சிங் கூறுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காவிரி நடுவர் மன்றம் பரிந்துரைத்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் என்ற சொல்லை இறுதித் தீர்ப்பில் குறிப்பிடவில்லை. செயல் திட்டம் எனத் தெரிவித்துள்ளதால், இது நடுவர் மன்றம் தெரிவித்ததைப் போல காவிரி மேலாண்மை வாரியமாகக் கூட இருக்கலாம். நடுவர் மன்றம் தெரிவித்த காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து நடுவண் அரசு அறிவிக்கை வெளியிட வேண்டுமா அல்லது அதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என்றார்.

இதில் நடுவண் அரசின் சார்பாக ஈடுபடும் அதிகாரிகளின் ஈடுபாடு மற்றும் பொறுப்புணர்ச்சியின் அடிப்படையிலேயே  செயல் திட்டமோ, மேலாண்மை வாரியமோ சிறப்பாக நிற்பதற்கோ, ஊற்றிக் கொள்வதற்கோ வாய்ப்பாய் அமையும்.

சரியான நபர்களால், சரியான அமைப்பு உருவாகி விட்டால் நான்கு மாநிலங்களுக்கு மட்டுமல்ல இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கும் நல்லது. 

இல்லையென்றால் தமிழகத்தின் சார்பாக எப்போதும் அரிசியும், மற்ற மாநிலங்களின் சார்பாக எப்போதும் உமியுமே கொண்டு வந்து, ஊதி ஊதி பகிர்ந்து கொள்ளப்படும் நடுவண் அரசின் ‘தொடர் போக்கு’ சிந்திக்கப்படும். நனைந்து சுமக்கப் போவது நடுவண் அரசே.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,722. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.