Show all

தமிழிசை உத்தரவாதம்! 30.03.2018 க்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்

05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழிசையைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னால் ஒரு அப்பாவிச் சிறுவனின் கதையும், இலஞ்சம் வாங்கி கொடுத்து வேலை வாங்கித் தரும் இடைத்தரகரைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் அப்பாவிச் சிறுவனின் கதையைக் கேட்போம். ஒரு பிரபலமான ஆங்கிலப் பள்ளியில் எல்கேஜி வகுப்பில் சேர்க்கும் பொருட்டு அந்தச் சிறுவனை நேர்காணலுக்கு அழைத்துச் சென்றனர் அவன் பெற்றோர். நேர்காணல் முடிந்து வீட்டிற்கு வந்ததிலிருந்து ஓயாமல் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தானாம் அந்தச் சிறுவன். பெற்றோர்கள் கூர்ந்து கவனித்த போது தெரிந்தது, ‘இந்தியாவின் தலைநகரம் ஆஸ்திரேலியாவாக இருக்க வேண்டும்’ என்று திரும்பத் திரும்ப வேண்டிக்கொண்டிருந்தது. ஏனென்று கேட்ட போது, எல்கேஜி நேர்காணலில், இந்தியாவின் தலைநகரம் எது என்று கேட்டதற்கு ஆஸ்திரேலியா என்று சொன்னதாகவும், அதன் பொருட்டே இந்தியாவின் தலைநகரம் ஆஸ்திரேலியாவாக இருக்க வேண்டும் என்று சாமியிடம் வேண்டியதாகவும் அவன் சொன்னான். அப்புறம் அவன் பெற்றோரும் அவன் போல் வேண்டத் தொடங்கி விட்டார்கள்.

அடுத்தக் கதை வேலை வாங்கித் தரும் இடைத்தரகர் கதை. யார் நேர்காணலில் கலந்து கொண்டு இவரை வந்து பார்த்தால் போதும். அவருக்கு வேலை வாங்கிக் கொடுத்து விடுவார். அதற்கு நேர்காணல் செய்தவரை சரி செய்வதற்காக குறிப்பிட்ட தொகையை இலஞ்சமாகக் கேட்பார். வேலை கிடைக்கா விட்டால் அந்த இலஞ்சத் தொகையைத் திருப்பித் தந்து விடும் நேர்மையான இடைத்தரகர். 

இதில் வேடிக்கை என்னவென்றால், நாம் கொடுக்கும் இலஞ்சப் பணத்தை வாங்கி பெட்டியில் பத்திரமாக வைத்துக் கொள்வார். நமக்கு வேலை கிடைப்பதற்காக அவரும் சாமியை மட்டும் வேண்டிக் கொண்டிருப்பார். நமக்கு வேலை கிடைக்காவிட்டால், நம்மிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்து விடுவார். நமது திறமையில், நமக்கு வேலை கிடைத்து விட்டால் அவருக்கு கொண்டாட்டம் தான். பணத்திற்கு பணமும் கிடைத்து விடும். அவர் சாதித்தாக பெருமையும் கிடைத்து விடும். 

இந்த இரண்டு பேர்களைப் போலத்தான் எந்த முயற்சியும், எந்தத் திறமையும் இல்லாமல் அதிர்ஷ்டத்தை நம்பி காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார் தமிழிசை.

சல்லிக்கட்டுக்கு, நீட்தேர்வுக்கு அவர் அளித்த உத்தரவாதங்கள் புஸ்வானம் ஆகிப் போன அனுபவங்கள் நமக்கு உண்டு. இப்போது 16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119 க்குள் (30.03.2018) காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கிறார் தமிழிசை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,731.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.