Show all

மோடியின் பேச்சில் உள்ள சீர்மை திட்டங்களில் இருக்கிறதா

இந்தியாவில் 100 சீர்மை நகரங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்த சீர்மை நகரங்கள் பெரிய பங்களிப்பை அளிக்கும்;  அதிகமான தொழில் வாய்ப்புகள் உருவாகும் . இந்த நகரங்களுக்காக 731 சீர்மை நகரத் திட்டங்களையும் தற்போது உள்ள மோடி அரசு அறிவித்தது. இதற்காக 46366 கோடி ரூபாயையும் செலவிட இருப்பதாக கூறியிருந்தது. ஆனால் இவை தற்போது என்ன நிலையில் இருக்கின்றன தெரியுமா?

     ஜனவரி 2017 வரையிலான இந்த அரசின் செயல்பாடுகள் இந்த சீர்மை நகர்கள் திட்டத்தில் எந்த அளவுக்கு  இருந்துள்ளது என்றால் மிகவும் மோசமானதாகவே இருந்துள்ளது. அதன் விவரங்கள் இதோ:

     மொத்தம் திட்டமிடப்பட்ட 731 திட்டங்களில் வெறும் 6.7 விழுக்காடு அளவு, அதாவது 49 திட்டங்கள் மட்டுமே நிறைவேற்றப்படுவதற்காகத் தொடங்க மட்டும்;பட்டுள்ளன. மற்றும் 24 திட்டங்கள் மட்டுமே நிறைவு பெற்றுள்ளன. மொத்தத்தில் பார்த்தால் வெறும் 3.3 விழுக்காடு திட்டங்கள் மட்டும்தான் இவ்வளவு நாளாக முடிக்கப்பட்டுள்ளன.

     மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் தகவல்படி இன்னமும் 49.5 விழுக்காடு திட்டங்கள் வெறும் திட்ட அளவிலேயே இருக்கின்றனவாம்.

     கடந்த செப்டம்பரில் தேர்தெடுத்து முதற்கட்டமாக தயாராகும் சீர்மை நகரங்கள் என அறிவிக்கப்பட்ட 60 சீர்மை நகரங்களில் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு பணிகள் முழுவேகத்தில் இல்லை.

     இந்தியா 2022-ம் ஆண்டுக்குள் 100 சீர்மை நகரங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.  60 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்ட நிலையில். அடுத்த 40 நகரங்கள் எது என்ற பட்டியல் வரும் ஜூனில் வெளியாகும் என்று அரசு கூறியுள்ளது. இதன் நோக்கமே நகர்ப்புற மேம்பாட்டை சிறப்பாக உருவாக்குவது தான். இதற்கு தடையில்லா மின்சாரம், தண்ணீர் வழங்குதல், போக்குவரத்து, இணையச் சேவை, ஆகியவை அடங்கிய தரமான உள்கட்டமைப்பு அவசியம். இந்த விசயங்களும் சரியாக அமைக்கப்படுவதற்கான வேகத்தில் இல்லை என்பது தான் உண்மை.

     மோடி அரசு ஆட்சி செய்யும் மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்ட்ரா ஆகியவை இந்த சீர்மை நகரப் பந்தயத்தில் முந்துகின்றன. இந்தூர், போபால் மற்றும் ஜபல்பூர் ஆகிய நகரங்களுக்கு ஒதுக்கப்பட்ட 159 திட்டங்களில் 20 திட்டங்களுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மூன்று நகரங்களில் 12 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன.  சூரத் மற்றும் அஹமதாபாத் நகரங்களில் 49 திட்டங்களில் 8 திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.  பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் டெல்லியில் மட்டும் 40-ல் ஆறு திட்டங்கள் மட்டுமே துவங்கப்பட்டுள்ளன.

     இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீர்மை நகரத் திட்டத்துக்கான துணை செயலாளர் சமீர் ஷர்மா,

     ஒப்பந்தம் விடுவதற்கான நேரம் அதிகமாகிறது. சாதாரண ஒப்பந்த முறைகளை விட சற்று கடினமான முறையை பின்பற்றுகிறோம். அதில் குறைவான தொகைக்கு ஒப்பந்தம் செய்பவருக்கு போதிய அனுபவம் இல்லாமல் இருக்கிறது. இதனால் தான் திட்டங்களில் தொய்வு ஏற்பட்டுள்ளது. என்று கூறியுள்ளார்.

 

     மோடி அரசு ஆட்சிக்கு வந்தவுடன் வரிசையாக அறிவித்த திட்டங்கள் எல்லாமே வாக்குறுதிகளாக மட்டும் தான் இருக்கிறது என்ற பேச்சு இருக்கிறது.

     இப்போது சீர்மை நகரமும் மக்கள் காதில் மலர் சொருகும்  விசயமாகவே  உள்ளது. அரசால் உரிய நேரத்தில் திட்டங்களை முடிக்க முடியவில்லை. முடியும் திட்டங்களின் எண்ணிக்கையும், வேகமும் இலக்கில் உள்ளது போல் இல்லை. இந்தத் திட்டங்களே இவ்வளவு குறைவான வேகத்தில் இருந்தால் இன்னும் 40 சீர்மை நகரங்களை அடையாளம் காண வேண்டும். அதற்கு திட்டங்களை வகுக்க வேண்டும் இவ்வளவு வேலை இருக்கிறது. இதே வேகத்தில் சென்றால் 2022-ல் சீர்மை  நகரங்கள் உருவாகுமா என்ற கேள்வியும் எழுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.