Show all

மோடியே முழு பொறுப்பு! நேஷனல் வங்கியில் நடந்த ரூ.11,700 கோடி ஊழல் குறித்து காங்கிரஸ் குற்றச்சாட்டு

04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: குஜராத் மாநிலத்தில் ஒரு வைர வியாபாரியின் குடும்பத்தில் பிறந்தவர் நிரவ் மோடி.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.280 கோடி மோசடியும், ரூ.11 ஆயிரத்து 600 கோடி சட்டவிரோத பரிவர்த்தனையும் செய்ததாக வைர வியாபாரி நிரவ் மோடி அகவை47 மீது வங்கியின் புகாரின் பேரில் நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை வழக்கு பதிவு செய்து லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.11 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் உடையவர், இந்தியாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் நகைக்கடைகளுக்கு சொந்தக்காரர், பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு நெருக்கமானவர் என்ற புகழோடு வலம் வருபவர் நிரவ் மோடி.

அமெரிக்காவில் உள்ள நகைக் கடையை அதிபர் டிரம்ப் திறந்து வைக்கும் அளவுக்கு அவருடன் நெருக்கத்தை நீரவ் மோடி ஏற்படுத்தியவர். டாவோஸ் நகரில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடியைச் சந்தித்து தனது இருப்பை வலுப்படுத்தியவர் நிரவ் மோடி.

நிரவ் மோடி ஜுவல்லரி என்ற நகைக்கடையை டெல்லியில் இரு இடங்களிலும், தெற்கு மும்பையில் கலா கோடி என்ற இடத்திலும் தொடங்கினார். அதன்பின் இவரின் தொடர்பு பல்வேறு முக்கிய நபர்களுடனும், அரசியல்வாதிகளும் விரிவடையவே இவரின் வர்த்தகமும் விரிவடைந்தது.

நீரவ் மோடி வைர வியாபாரத்திலும், நகைக் கடைத் தொழிலிலும் அசுர வளர்ச்சி அடைவதற்கு அவரின் சகோதரர் நிஷால், மற்றும் மாமா மெகுல் சோக்ஸியும் காரணமாகும். இதில் மெகுல் சோக்ஸி கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், என்ட்லெஸ், ஜேஸ்மின், முகல் மற்றும் அனிரா கட் ஆகிய சிறப்பு மிக்க வைரங்களுக்கு காப்புரிமையும் நிரவ் மோடி பெற்று அதை தயாரித்து வந்தார். இதனால் சர்வதேச அளவில் நிரவ் மோடி தனதுவர்த்தகத்தை விரிவுபடுத்த இந்த காப்புரிமை வசதியாக இருந்தது.

நிரவ் மோடியின் வர்த்தகம் சர்வதேச அளவில் விரிவடையத் தொடங்கியது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேடிசனிலும், லண்டனில் பாண்ட் ஸ்டிரீட் வரையிலும் நகைக்கடை திறந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நியூயார்கில் நிரவ் மோடியின் நகைக்கடையை டொனால்ட் டிரம்ப் திறந்து வைத்துள்ளார்.

மேலும், ஹவாய் முதல் மக்காவு, ஹாங்காங், பெய்ஜிங் ஆகிய நகரங்களிலும் அடுத்தடுத்து நிரவ் மோடி தனது நகைக்கடையை விரிவுபடுத்தி சர்வதேச தொழிலதிபராக, வர்த்தகராக நிரவ் மோடி வலம் வந்தார்.

இப்போது நிரவ் மோடிக்கு குஜராத், மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் நகைக்கடைகளும், வைரம் பட்டை தீட்டும் நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன

கடந்த ஆண்டில் போர்ப்ஸ் பத்திரிகையில் மிக இளம் வயது கோடீசுவரர் பட்டியலிலும் நிரவ் மோடி இடம் பெற்றார்.

சர்வதேச அளவில் நிரவ் மோடியின் நகைகளுக்கு தூதுவராக நடிகை பிரியங்கா சோப்ரா இருந்து வருகிறார். மேலும், தான் வடிவமைக்கும் நகைகளை பிரபலப்படுத்த ஆஸ்கார் விருது வென்ற ஹாலிவுட் நடிகைகள் டகோடா ஜான்சன், டாராஜி பி ஹென்சன் ஆகியோரை பயன்படுத்தியுள்ளார்.

நீரவ் மோடியும், அம்பானி குடும்பத்தாரும் ஒருவகையில் நெருங்கிய உறவினர்கள். அதாவது அனில் அம்பானியின் சகோதரியின் மகள் இஸ்ஹிதா சாய்கோகரை நிரவ் மோடி தனது சகோதரர் நிஷாலுக்கு மணம் முடித்து வைத்துள்ளார்.

நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றில், 1.80 பில்லியன் டாலர் மதிப்பிலான (சுமார் ரூ.11,700 கோடி) பண மோசடி நடந்து இருப்பதாக வங்கி நிர்வாகம் சார்பில் நடுவண் குற்றப் புலனாய்வுத் துறையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர்கள் புடைசூழ, காங்கிரசின் ஊடக பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

விடுதலை இந்தியாவில் நடந்த மிகப்பெரிய வங்கி ஊழல் இதுதான். இந்த ஊழல், பஞ்சாப் நேஷனல் வங்கி மட்டுமின்றி, பாரத ஸ்டேட் வங்கி உள்பட 30 வங்கிகள் சம்பந்தப்பட்ட ஊழல் ஆகும். முக்கிய குற்றவாளிகள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் எப்படி மோசடி செய்தனர் என்பதை பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஒட்டுமொத்த ஊழல் பற்றியும், 01,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5118 அன்று (26.07.2016) இந்தியத் தலைமை அமைச்சர் மோடி அலுவலகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியத் தலைமை அமைச்சர் மோடி அலுவலகமோ, இதர அரசுத்துறைகளோ எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நிரவ் மோடி தப்பிவிட்டார்.

எனவே, இந்த ஊழலுக்கும், நிரவ் மோடி தப்பியதற்கும் இந்தியத் தலைமை அமைச்சர் மோடி தான் நேரடி பொறுப்பு ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,700

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.