Show all

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில், நிறுவனத்திற்கு ஆதரவாக காவல்துறையின் கிராம மக்கள் மீதான நடவடிக்கை

03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் உள்ள அ.குமரரெட்டியாபுரம் கிராமப்பகுதியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களில், குறிப்பாக எட்டு பேர்கள் மட்;டும் கைது செய்யப்பட்டது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பலத்த கண்டனத்தை எழுப்பியுள்ளது.

இந்த ஆலை சுற்றுச்சூழலை கடுமையாக மாசுபடுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டு மக்களால் வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் மாநிலப் பொறுப்பாளார்கள் சமீபத்தில் நேரில் சென்று விசாரித்தபோது இந்த ஆலை வெளியிடும் நச்சுப்புகை காரணமாக இக்கிராம மக்கள், மூச்சுத்திணறல், நெஞ்சு எரிச்சல், கருச்சிதைவு, புற்றுநோய், சிறுநீரகக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.

ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுநீரைக் குடித்த ஆடு, மாடுகள் இறந்துள்ளன. நள்ளிரவு நேரத்தில் இந்த தொழிற்சாலையிலிருந்து வெளியற்றப்படும் நச்சுப்புகை அப்பகுதியைக் கடுமையாக மாசுபடுத்துவதாக மக்கள் தெரிவித்தனர். தெற்கு வீரபாண்டியபுரம் மற்றும் அதைச்சார்ந்த அ.குமரரெட்டியார்புரம், காயலூரணி ஆகிய கிராமங்களில் நிலத்தடி நீர் விஷநீராக மாறிவிட்டது என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய சான்றிதழும் உள்ளது.

நடுவண் அரசின் நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வின்படி சுற்றுசூழலிலும், நிலத்தடி நீர் மாசுபாட்டிலும் மிகவும் மோசமாகப் பாதிப்படைந்துள்ள நகரமாகத் தூத்துத்குடி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் இப்பகுதி மக்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், சிப்காட் விரிவாக்கப் பகுதியில் இரண்டாவது ஆலையை ஸ்டெர்லைட் நிறுவ உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த இரண்டு நாட்களாக குடும்பங்களுடன் திரளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராடிய மக்களை இழுத்துச் சென்ற காவல்துறை, மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசியக்குழு உறுப்பினர் பேராசிரியர் பாத்திமாபாபு மீதும் மற்றும் சுஜித், வேல்ராஜ், மகேஷ், முருகன், வழக்கறிஞர் விமல்ராஜ், துரைப்பாண்டி, ஆல்பட் சாமுவேல் ஆகியோர் மீதும் பல்வேறு பிரிவுகளில் பொய்வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது.

இதனால், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிரானப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊர்மக்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 8 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி ஊர்மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் தாமிர ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக்கூடாது எனவும், ஏற்கெனவே செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையையும் மூட வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி உள்ள கிராமத்தில் ஒன்றான குமரெட்டியாபுரம் கிராம மக்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 43 சிறுவர், சிறுமியர், 142 பெண்கள் உட்பட 257 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில் ஒரு பெண் உட்பட 8 பேர் மீது நேற்று இரவோடு இரவாக வழக்குப் பதிவு செய்து தூத்துக்குடி ஒருங்கிணைந்த அறங்கூற்று மன்றத்தின் ஜெ-3 அறங்கூற்று மன்ற அறங்கூற்றுவர் ரோஸ்கலா முன்பு அணியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட 8 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க கூடாது எனவும் வலியுறுத்தி குமரெட்டியாபுரம் ஊர்மக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 பேரை விடுதலை செய்யும் வரை கிராமத்திலேயே போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,699

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.