Show all

பீகாரில் சிவசேனா 150 இடங்களில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது பாஜவுக்கு தலைவலி.

பாஜ கூட்டணியில் தற்போது மேலும் ஒரு சிக்கலாக அதன் மற்றொரு கூட்டணி கட்சியான சிவசேனா 150 இடங்களில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

பீகாரில் அக்டோபர் 12ம் தேதி தொடங்கி 5 கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாக பாஜ கூட்டணியில் இருந்து வந்த தொகுதி பங்கீடு இழுபறி ஒரு வழியாக முடிவுக்கு வந்து வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில் திடீரென மற்றொரு புதிய தலைவலியாக அதன் மற்றொரு கூட்டணி கட்சியான சிவசேனா பீகாரில் 150 இடங்களில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பாஜ கூட்டணியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் பெரிய அளவில் சிவசேனாவுக்கு செல்வாக்கு இல்லாத போதிலும் தங்கள் மீதான எதிர்மறையான எண்ணத்தை போக்கும் வகையில் இந்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக சிவசேனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ரவுத் கூறுகையில்,

பீகார் மக்களுக்கு எதிரான கட்சி என்று சிவசேனா மீது வதந்தி பரப்ப்படுகிறது. அதை போக்கும் வகையில் இந்தத் தேர்தலில் 150 தொகுதிகளில் தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. பாஜ தலைமையிலான கூட்டணி நிதிஷ் கூட்டணிக்கு சவாலாக இருக்கும் என்றார்.சிவசேனா மீது பீகார் மக்களுக்கு வெறுப்பு உள்ளதாக கூறுப்படுவது குறித்து கேட்ட போது,

அதை மறுத்த சஞ்சய் ரவுத் மேலும் கூறுகையில், தேசப்பற்று, வீரம் ஆகியவற்றுடன் நாட்டின் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்த பீகார் மக்களை சிவசேனா மதிக்கிறது. எனவே மக்களோடு எங்களுக்கு உணர்வுபூர்வமான உறவு உள்ளது என்றார்.

அதே நேரத்தில் பீகாரில் இருந்து மகாராஷ்டிரா வந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் மீது மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கேட்ட போது,

இந்த விவகாரத்தில் சிவசேனா கட்சியினர் யாராவது இதில் ஈடுபட்டார்கள் என்பதை காட்ட முடியுமா? ஒரு சில அரசியல் வாதிகள் சிவசேனாவின் இமேஜை குலைப்பதற்காக இது போன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர். பீகாரின் வளர்ச்சி குறித்து மட்டுமே சிவசேனா அக்கறை கொண்டுள்ளது என்றார்.

பாஜ கூட்டணியில் ஏன் சேரவில்லை என்ற போது,

இந்தி பேசும் மக்கள் மத்தியில் சிவசேனா தனது சொந்த பலத்தை வலுப்படுத்தும் முகமாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது.

இந்துத்துவா, ஏழ்மை, வேலைவாய்ப்பு ஆகியவற்றை மையமாக வைத்து சிவசேனா இந்த தேர்தலில் பிரசாரம் செய்யும் என்றார். மேலும் பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கொள்கையில் தோல்வி அடைந்து விட்டனர். 2002 குஜராத் கலவரத்திற்கு பிறகு வாஜ்பாய் அரசில் இருந்து ராஜினாமா செய்த ராம் விலாஸ் பாஸ்வான் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார் என்றும் குற்றம் சாட்டினார்.

தற்போது சிவசேனாவின் இந்த முடிவு பாஜ வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.