Show all

‘மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ தத்துவத்தைத் தூசு தட்டி தூக்கி நிறுத்தும் முயற்சியில் திமுக! 370 நீக்கத்திற்கு எதிராகப் போராட்டம்

‘மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ தத்துவத்தைத் தூசு தட்டி தூக்கி நிறுத்தும் முயற்சியில் களமிறங்கியிருக்கிறது திமுக. காஷ்மீருக்கு கடந்த 70 ஆண்டுகளாக வழங்கப் பட்டு வந்த சிறப்புத் தகுதி 370 சட்டப் பிரிவை பாஜக நடுவண் அரசு நீக்கியதற்கு எதிராகப் போராட்டத்தை இன்று முன்னெடுக்கிறது டெல்லியில்.

05,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு 70 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த சிறப்புத் தகுதியை நடுவண் அரசு கடந்த கிழமை நீக்கி நாடாளுமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டது. மேலும் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரு ஒன்றியப் பகுதிகளாகப் பிரிக்கப்படும் எனவும் தெரிவித்தது. காஷ்மீர் மாநிலம் தொடர்பான அனைத்து சட்டமுன்வரைவுகளும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, இந்திய குடியரசுத்தலைவரின்  ஒப்புதலும் பெறப்பட்டது. இந்த நிலையில் இதற்கு எதிர் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வந்தனர்.

மேலும் காஷ்மீரில் உள்ள அரசியல் தலைவர்களை வீட்டுக் காவலில் நடுவண் அரசு வைத்துள்ளதற்கு பெரும் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து காஷ்மீருக்கான சிறப்புத் தகுதி ரத்து செய்யப்பட்டதற்கு திமுக சார்பில் இன்று காலை 11.00 மணி அளவில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடக்கும் என திமுக தலைமை அறிவித்தது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து கட்சிகளுக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, திமுக நடத்தும் இந்தப் போராட்டத்தில் இந்தியா முழுவதும் 14 கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க தங்களின் ஆதரவினை திமுக தலைமைக்கு தெரிவித்துள்ளன. 

திமுக நடத்தும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள உள்ள 14 கட்சிகள், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஆம்ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, புரட்சிகர சோசலிஸ்ட், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இது பாஜக அரசுக்கு திமுக முன்னெடுக்கும் மிகச்சரியான அதிர்ச்சி மருத்துவம் என்று சொல்லப்படுகிறது.  

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,252.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.