Show all

கமல் தலையிட்டு ஆவன செய்ய வேண்டும்! விஜய் தொலைக்காட்சி தன்மீது அளித்துள்ள புகார் பொய்யானது: மதுமிதா.

நடிகை மதுமிதா அவர்கள், விஜய் தொலைக்காட்சி தன்மீது அளித்துள்ள புகார் பொய்யானது என்றும், கமல் தலையிட்டு ஆவன செய்ய வேண்டும் என்றும், வேண்டுகோள் விடுத்துள்ளார்.

05,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: விஜய் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழு, பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவருக்கு புலனம் மூலமாக, ‘பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்’ என்றவாறான கேளொலி சேதி அனுப்பி, நடிகை மதுமிதா அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளதாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.  

இதை அறிந்த நடிகை மதுமிதா அவர்கள், விஜய் தொலைக்காட்சி தன்மீது அளித்துள்ள புகார் பொய்யானது என்றும், கமல் தலையிட்டு ஆவன செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி, தற்போது 58 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. அண்மையில் அந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களுக்கு  நடந்த வேலைப்போட்டி ஒன்றில் தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொண்டதாக நடிகை மதுமிதா வெளியேற்றப்பட்டார். 

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களுக்கு  நடந்த வேலைப்போட்டியில் மதுமிதா பங்களிப்பு காட்சிகள், அது ஏன் பிரச்சனையானது? பிரச்சனைக்குக் காரணமான போட்டியாளர்கள் யார் யார்? அவர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும். நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப் படுமா? என்றெல்லாம் விஜய் தொலைக்காட்சியால் எந்தத் தகவலும் அளிக்கப்பட வில்லை; ஒளிபரப்பும் செய்ய வில்லை. 

‘வேலைப்போட்டிக்குப் பின் நடந்த விவாதத்தில் தன்னுடைய கருத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக மதுமிதா தனக்குத்தானே தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டார். அவரின் இந்த செயல் பிக்பாஸ் வீட்டின் முதன்மை விதியை உடைத்து எறிவதாகும். இந்த அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டார்’ என்று நிகழ்ச்சி குழு தெரிவித்தது.

இந்நிலையில் நேற்று நடிகை மதுமிதா மீது விஜய்  தொலைக்காட்சி சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத், கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், ‘பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து மதுமிதா வெளியே செல்லும்போது அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு அவருக்கு வழங்கவேண்டிய தொகைவிவரப் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது. ஒப்பந்தத்தில் கூறியபடி மதுமிதா ஏற்கெனவே ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுள்ளார். மீதமுள்ள ஒருநாள் ரூ.80000 வீதம் 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை திருப்பித் தருவதாக கூறியிருந்தோம்.

அதை அப்போது ஒப்புக்கொண்ட மதுமிதா, கடந்த திங்கட் கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவருக்கு புலனம் மூலம் கேளொலி சேதி அனுப்பி மிரட்டல் விடுத்துள்ளார். பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி உள்ளார்’ என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகார் குறித்து இன்று இதழியலாளர்களை சந்தித்த மதுமிதா, “நான் அமைதியாக இருந்தால் என் பெயர் கெட்டுவிடும் என்பதால் தான் தெளிவுபடுத்துகிறேன். என் மீது பொய் புகார் அளித்துள்ளது விஜய் தொலைக்காட்சி. எதற்காக என்மீது புகார் அளித்தார்கள் என்றே தெரியவில்லை. எனக்கு வழங்க வேண்டிய தொகை குறித்து கடிதம் அனுப்பினேன். விஜய் தொலைக்காட்சியை நான் எப்போதும் மிரட்டவில்லை. என் மீது புகார் கொடுத்ததற்கு பின் விஜய் தொலைக்காட்சியை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதுவரை நான் வெளியில் சென்று மருத்துவம் பார்க்கவில்லை. நிகழ்ச்சிக் குழு அனுமதித்த மருத்துவர்தான் எனக்கு மருத்துவம் பார்த்து வருகிறார். இன்றுவரை விஜய் தொலைக்காட்சி வகுத்த வழிமுறைப்படியே நடக்கிறேன். திரைத்துறையில் இருக்கும் என்மீது இதுவரை எந்த புகாரும் வந்ததில்லை. விஜய் தொலைக்காட்சியும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனும் தலையிட்டு இந்த விவகாரத்தை சுமூகமாக முடித்து வைக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்” என்று நடிகை மதுமிதா அவர்கள் தனது வேண்டுகோளைத் தெரியப்படுத்தினார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,252.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.