Show all

கணக்கெடுப்பில் தெரியவருகிறது! இந்தியாவில் ஏறத்தாழ 60 விழுக்காட்டுக் குடும்பங்கள் நிதி பாதுகாப்பின்மையுடன் பிழைப்பு நடத்துகின்றன

இந்திய குடும்பத்தினர் 3 விழுக்காட்டினர் மட்டுமே ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் என்றும், இந்தியாவில் ஏறத்தாழ 60 விழுக்காட்டுக் குடும்பங்கள் நிதி பாதுகாப்பின்மையுடன் பிழைப்பு நடத்துகின்றன என்றும், 'பணம்9' நிறுவனக் கணக்கெடுப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்- விடுதலை பெற்ற இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட ஆட்சியின் மாட்சியின்மையைப் புலப்படுத்துகிறது.

22,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியாவில் ஏறத்தாழ 60 விழுக்காட்டுக் குடும்பங்கள் நிதி பாதுகாப்பின்மை தன்மையுடன் இருப்பதாகவும், மக்கள் அன்றாட செலவுக்கே போராடுகின்றனர் என்றும் இந்தியாவின் நிரக்கை (சராசரி) வருமானம் மற்றும் செலவுகள் குறித்து 'பணம்9' என்கிற நிறுவனத்தின் கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் உள்ள குடும்பங்களின் நிரக்கை (சராசரி) வருமானம் எவ்வளவு என்பது குறித்த கணக்கெடுப்பு தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதில் பல அதிர்ச்சிப்பாடான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்திய குடும்பங்களின் நிரக்கை வருமானம் மிகவும் குறைவாக இருப்பதாகவும் மிகச் சிலர் மட்டுமே இந்தியாவில் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் அந்த கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. 

இந்திய குடும்பங்களின் நிரக்கை வருமானம் மாதத்திற்கு ரூ.23,000 மட்டுமே என்று தெரிவிக்கிற இந்தக் கணக்கெடுப்பு- ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் முன்னேற்றம் போதாது என்பதான   அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இந்தக் கணக்கெடுப்பு- நிதி பாதுகாப்பு இல்லாமல், இந்தியாவில் உள்ள மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர் என்பதை வெட்ட வெளிச்சமாக வெளிப்படுத்தியுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள மக்கள் எவ்வளவு செலவு செய்கிறார்கள் மற்றும் சேமிக்கிறார்கள் என்பது குறித்த தகவலையும் பதிவு செய்துள்ளது. 

இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்திய குடும்பத்தில் சுமார் 4.2 விழுக்காட்டினர் மட்டுமே மாதம் 23,000 ரூபாய் வருமானம் என்கிற நிரக்கை வருமான வாழ்க்கை மேற்கொண்டுள்ளனர் என்றும், 46 விழுக்காட்டு இந்தியர்கள் ஏறத்தாழ 15 ஆயிரத்துக்கும் குறைவான வருமானம் கொண்டுள்ளனர் என்றும் அவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை வாழ்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளது. 

நிதி பாதுகாப்பு குறித்து இந்நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பின்படி இந்திய குடும்பத்தினர் 3 விழுக்காட்டினர் மட்டுமே ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் என்றும் அவர்கள் பெரும்பாலும் அதிக வருமானம் கொண்ட உயர் நடுத்தர மற்றும் பணக்காரர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

சேமிப்பைப் பொறுத்தவரை 70 விழுக்காட்டு இந்திய குடும்பங்கள் வங்கியில் வைப்பு தொகை, காப்பீடு, அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு மற்றும் தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்து வருவதாகவும் இந்த கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக வங்கி மற்றும் அஞ்சல் அலுவலக சேமிப்பு அதிகமாக உள்ளது என்றும் அதனை அடுத்து வாழ்க்கைக் காப்பீடு மற்றும் தங்கம் வாங்குவதில் இந்தியர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் 64 விழுக்காடு சேமிப்புகள் வங்கி கணக்கில் தான் இடம் பெற்றுள்ளது என்றும் 19 விழுக்காட்ட மக்கள் மட்டுமே காப்பீடு வசதியை பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. இந்திய மக்கள் தொகையை கணக்கிட்டால் மிகவும் குறைவாகவே சேமிப்பு காணப்படுகிறது என்றும் இந்திய குடும்பங்களில் ஐந்தில் இரண்டு பங்கினர் மட்டுமே இதுவரை சேமிப்பு குறித்த விழிப்புணர்வை கொண்டுள்ளனர் என்றும் இந்த கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. 

இந்தியர்கள் நடுவே தற்போது சேமிப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது என்றும் வருங்காலத்தில் இந்தியர்கள் சேமிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தி பாதுகாப்பான வாழ்க்கைக்கு வித்திடுவார்கள் என்றும் ஆறுதல் அளித்து இந்த அறிக்கை நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏறத்தாழ 60 விழுக்காட்டுக் குடும்பங்கள் நிதி பாதுகாப்பின்மையுடன் பிழைப்பு நடத்துகி;ன்றன என்கிற தகவல்- விடுதலை பெற்ற இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட ஆட்சியின் மாட்சியின்மையைப் புலப்படுத்துகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,426.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.