Show all

கனவு வேலை, பத்தாண்டுகால தொடர் முயற்சி என்று கொண்டாடுகிறார் ஓர் இளைஞர்! கூகுள் நிறுவனப் பணியில் சேர்ந்துள்ளதை

பெங்களுரைச் சேர்ந்த அட்வின் ராய் நெட்டோ என்பவர் தனது கனவு நிறுவனமான கூகுளில் பத்து ஆண்டுகள் தொடர்ந்து விண்ணப்பம் செய்து, நேர்காணலில் கலந்து கொண்டு பல முறை தோல்வி அடைத்தாலும் தொடர் முயற்சியில் தற்போது கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார்.   

29,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5124: கூகுள், மைக்ரோசாப்ட், முகநூல், ஆப்பிள் போன்ற முன்னணி நிறுவனங்களில் ஒரு வேலை வாய்ப்புக்கு லட்ச கணக்கில் விண்ணப்பங்கள் குவியும், இளம் ஊழியர்கள் முதல் அதிக அனுபவம் கொண்ட ஊழியர்கள் வரையில் பல்வேறு பெரு கல்வி நிறுவனங்களில் படிப்பு முடித்தவர்கள் எல்லாம் விண்ணப்பம் செய்யும் காரணத்தால் எப்போதுமே போட்டி கடுமையாக இருக்கும். 

இந்த நிலையில் அட்வின் ராய் நெட்டோ என்பவர் தனது கனவு நிறுவனமான கூகுளில் பத்து ஆண்டுகள் தொடர்ந்து விண்ணப்பம் செய்து, நேர்காணலில் கலந்து கொண்டு பல முறை தோல்வி அடைத்தாலும் தொடர் முயற்சியில் தற்போது கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார்.   

இவர் செல்பேசி மற்றும் இணையப் பயன்பாடுகளில் 12 ஆண்டுகள் பட்டறிவு கொண்டுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளாகக் கூகுள் நிறுவன பணிக்கு விண்ணப்பம் செய்து வரும் அட்வின் ராய் நெட்டோ தனது கனவு வேலையைக் கைப்பற்றியுள்ளார். நடப்பாண்டு நேர்காணலில் தேர்வான நிலையில் விரைவில் கூகுள் நிறுவனத்தின் வடிவமைப்பு அணியில் இணைய உள்ளார். இந்தச் செய்தியை அட்வின் ராய் தனது தாய் மற்றும் மனைவியிடம் தெரிவிக்கும் போது எடுக்கப்பட்ட காணொளி தற்போது இணையத்தில் தீயாகி வருகிறது. 

இந்த காணொளிப் பதிவில் ஒவ்வொரு ஆண்டும் தான் பணிக்கு விண்ணப்பம் செய்து தோல்வி அடைந்த போது, அதில் செய்த தவறுகளைத் திருத்திக்கொண்டு பத்து ஆண்டு போராட்டத்திற்குப் பின்பு கூகுளில் வேலை வாங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் அட்வின் ராய். 

ஒவ்வொரு முறையும் தன்விவரக் குறிப்பில் தனது திறமைகள், கல்வித்தகுதி போன்றவற்றை மாற்றி முயற்சிப்பேன், பேரறிமுகமான வடிவமைப்புக் கல்லூரியில் இருந்து நான் பட்டம் பெறவில்லை, ஆனால் திறமையை வளர்த்துக்கொண்டு என்னுடைய தன்விவரக் குறிப்பை மேம்படுத்தினேன் என அட்வின் ராய்க் கூறியுள்ளார். 

கூகுள் நிறுவனம் ஒவ்வொரு கிழமையும் 70000 முதல் 1 லட்சம் விண்ணப்பங்களைப் பெறுகிறது, ஆனால் அதில் இருந்து வெறுமனே 144 பேர் மட்டுமே தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் வெற்றி அடைய வேண்டும் என்றால் கட்டாயம் உங்கள் திறமையை முழுமையாகக் காட்டும் வகையில் தன்விவரக் குறிப்பு இருக்க வேண்டும் எனக் கூகுளில் பணியில் சேர விரும்புவோருக்குத் தான் கற்ற பாடத்தைக் கூறுகிறார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,433.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.