Show all

கொடாக்கண்டன்- விடாக்கண்டன்- மோடிஅரசும்! எதிர்கட்சிகளும்! 18நாட்களாக நாடாளுமன்ற அவைகள் முடக்கம்

19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாடாளுமன்ற இரு அவைகளும் பதினெட்டாவது நாளாக இன்றும் முடங்கின. நாடாளுமன்ற வரவு-செலவு கூட்டத்தொடரின் இரண்டாவது பாகம் நடைபெற்று வருகிறது. இதன் கடைசி கிழமையின் தொடக்க நாளான இன்றும் மக்களவை கூடியவுடன் அதிமுக உறுப்பினர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அமளியில் ஈடுபட்டனர். தங்கள் கைகளில் காவிரி பிரச்சினையை குறிப்பிட்டு பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தெலுங்குதேசம், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் தங்கள் இருக்கைகளில் எழுந்து நின்றபடி இருந்தனர். தங்கள் அளித்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுக்க வேண்டும் என வலியுறுத்தியபடி இருந்தனர்.

காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜுனா கார்கே, தாழ்த்தப் பட்ட மற்றும் மலைச்சாதியினர்களுக்கு  எதிராக மோடி அரசு செயல்படுவதையும், நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய  வினாத்தாள்கள் வெளியானதன் மீதும் அவையில் விவாதிக்க விரும்புகிறோம் எனக் குறிப்பிட்டார். 

அவை கூடிய சில நிமிடங்களில் கேள்வி நேரமும் நடைபெறாமல் நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பிறகு மீண்டும் கூடிய மக்களவையில் அமளி தொடரவே இன்று நாள் முழுவதிலும் ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல், மாநிலங்களவையிலும் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் நடுவண் அரசு மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு எதிராக செயல்படுவதாகக் கூறி முழக்கம் எழுப்பியது. பல்வேறு வங்கிகளின் ஊழலை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி திரிணமூல் காங்கிரஸ். அமளி செய்தது. சிறப்பு தகுதி வேண்டி தெலுங்தேசம் கோர, காவிரி பிரச்சினையை முன்வைத்து திமுக, அதிமுக உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர்.

இது, அவையின் துணைத்தலைவர் எம்.வெங்கய்யநாயுடு தனது இருக்கையில் அமருவதற்கு முன்பாகவே தொடங்கப்பட்டு விட்டது. இதனால், அவையில் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாமல் போனது.

நாளை மீண்டும் கூடவிருக்கும் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் இந்த அமளி தொடராமல் இருக்க, மோடி அரசுக்கு  எதிர்கட்சிகள் முன்வைக்கிற எந்தப் பிரச்சனையையும் தீர்த்து வைக்க வேண்டும் என்கிற எண்ணம் துளியும் வரவில்லை என்றே தெரிகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,745.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.